“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..!

அறிமுக இயக்குனராக சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பலரும் தங்களது முதல் படத்திலேயே கமர்ஷியலாக சில அம்சங்களை புகுத்தி ரசிகர்களை கவர்ந்துவிட வேண்டும் என நினைப்பது வாடிக்கை தான்.. ஒரு சிலர் தான், தாங்கள் விரும்பிய கதையை, தங்களை பாதித்த நிகழ்வுகளை, இந்த சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை தங்கள் முதல் படமாக துணிச்சலாக எடுப்பார்கள்..

​வரும் மே-25ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘ஒரு குப்பை கதை’ படத்தின் இயக்குனர் காளி ரங்கசாமியும் இந்த ஒரு சிலர் பட்டியலில் ஒருவராக இடம் பிடிக்கிறார். வழக்கு எண் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

சமுதாயத்திற்கு பயன்படும் கருத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் இந்தப்படம் கமர்ஷியலாகவும் இருக்கும் என கூறும் காளி ரங்கசாமி இந்தப்படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்..

இந்தக்கதையில் அப்பாவியான கணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு நபரை தேடவேண்டும் என நினைத்தபோது கொஞ்சம் புதிய முகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்கேற்றவாறு டான்ஸ் மாஸ்டர் தினேஷை அழைத்து வந்தார் தயாரிப்பாளர் அஸ்லம். அவரும் நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு இயல்பாக உயிர்கொடுத்திருக்கிறார்.

அவரை கதாநாயகன் ஆக்கியபிறகு அவரது உயரத்திற்கு ஹீரோயின் தேடுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. அதேசமயம் மனப்பொருத்தம் இல்லாமல் வாழும் கணவன்-மனைவி பற்றிய கதை என்பதால் நாயகி, நாயகனை விட கொஞ்சம் உயரமாக இருந்தாலும், அது கதைக்கான லாஜிக்காகவே இருக்கும் என்பதால் அந்த கோணத்தில் நாயகியை தேடினோம்..

ஆனால் தினேஷ் மாஸ்டர் ஹீரோவா என ஆர்வமாக நடிக்க வந்த சில கதாநாயகிகள் கூட, கதாநாயகி கேரக்டரை பற்றி கேட்டதும் இதில் நடிக்க தயங்கினார்கள்.. காரணம் கதைப்படி ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் இந்த கதையை கேட்டதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் ‘வழக்கு எண்’ மனிஷா. நாயகனுக்கு சமமான கதாபாத்திரம், கதையை தனது தோளில் சுமந்து செல்லக்கூடிய கதாபாத்திரம்.. அதை சரியாக செய்திருக்கிறார் மனிஷா.

குடும்ப கதை என்பதே கத்தி மேல் நடப்பது மாதிரியான விஷயம்.. கொஞ்சம் அசந்தால் சீரியல் மாதிரி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. அதனால் படம் ரசிகர்களுக்கு போராடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.. அந்த வேலையை யோகிபாபு படம் முழுக்க கச்சிதமாக செய்திருக்கிறார்.

நம் சமுதாயத்தில் குடும்ப அமைப்பு என்பது மிக முக்கியமானது.. அதை எக்காரணம் கொண்டும் சிதைய விடக்கூடாது.. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகளை ஊதி பெரிதாக்காமல் விட்டுக்கொடுத்து போய்விடுவது நல்லது, அப்படி இல்லாவிட்டால் குடும்பத்தை அது எப்படி பாதிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன்” என்கிறார் காளி ரங்கசாமி

DineshManishaoru Kuppai kathaiஒரு குப்பை கதைமனிஷா