1980களில் ரஜினி, கமலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கிறங்கடித்தாரே அந்த அமலாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் தானே… இவரை தமிழ் சினிமாவில் ‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் சாட்சாத் நம்ம டி.ஆர் தான்.
‘உதயம்’ படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காதலால் தெலுங்கு சூப்பர் ஹீரோ நாகார்ஜூனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே ஒதுங்கியவர் இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பயிருக்கிறார். ஆனால் வெள்ளித்திரையில் அல்ல. சின்னத்திரையில்..
ஆம் ஜி தமிழ் சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘உயிர்மெய்’ என்ற சீரியலில் நடிக்கிறார் அமலா. 12 டாக்டர்களை மையப்படுத்தி பின்னப்பட்டுள்ள தொடர் இது. இதில் ஒரு டாக்டராக அமலா நடிக்கிறார். கண்ட நாள் முதல்’ இயக்குனர் பிரியா தான் இந்த சீரியலின் கிரியேட்டிவ் ஹெட். அவரது கணவர் பூஷண் தான் இந்த தொடரின் இயக்குனர்.
நேற்று, அம்பத்தூரில் தான் நடித்துக்கொண்டிருந்த ‘உயிர்மெய்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே பத்திரிகாயாலர்களை வரவழைத்து தனது குழுவினருடன் சந்தித்தார் அமலா. ஏன் மீண்டும் சினிமாவுக்கு வராமல் சின்னத்திரைப்பக்கம் போய்விட்டீர்கள் என்று கேட்டால் தான் பார்த்துவரும் சமூக சேவையையும் தடையில்லாமல் தொடரும் நேர வசதிக்காகத்தான் சீரியலுக்கு வந்தேன் என்கிறார் அமலா.
சரி இந்த சீரியலில் நடிக்க காரணம் அவர் ஏற்றிருக்கும் டாக்டர் வேடம் தானாம். காரணம் சினிமாவில் அவர் நடித்த ஒரு படத்தில் கூட அவர் டாக்டராக நடிக்கவில்லையாம். அத்துடன் சேவை மனப்பன்மையுடன் நேரம் காலம் பாராமல் தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் மருத்துவர்களின் மேல அமலாவுக்கு மதிப்பு அதிகமாம். அதனால் தான் இந்த சீரியலில் நடிக்க ஒத்துக்கொண்டாராம்.