விஜய் மூலன் டாக்கீஸ் தயாரிப்பில் ஜதின் மற்றும் நிஷாந்த் என இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள படம் ஓடு ராஜா ஓடு. இப்படத்தில் ஜோக்கர் படம் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த குருசோமசுந்தரம் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். அவர் தவிர நாசர், ‘லென்ஸ்’ ஆனந்த்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
இந்தப்படத்தின் நடிகர்-தொழில்நுட்ப குழுவினரிடையே ஒரு பொதுவான சிறப்பம்சம் அடங்கியுள்ளது.. குரு சோமசுந்தரம், ஆனந்தசாமி உள்ளிட்டவர்கள் கூத்துப்பட்டறை தயாரிப்புகள். படத்தின் இயக்குனர், மற்றும் ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப குழு அனைவரும் எல்.வி.பிரசாத் இன்ஸ்டிடியூட் மாணவர்கள்.. இந்தப்படத்தில் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள் எல்லாம் திருநெல்வேலியை சேர்ந் ஜோசப் கல்லூரியில் விஸ்காம் படிக்கும் மாணவர்கள் என்பது தான் அந்த சிறப்பம்சம்.
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் நாசர் பேசியதாவது, “படத்தலைப்பைப் போலவே, படப்பிடிப்பில் பல நாட்கள் நானும் தெருத்தெருவாக ஓடினேன். இலவசமாக எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கிறதோ, அங்கெல்லாம் ஓடினோம். இப்போது சினிமாவுக்கு வரும் இயக்குநர்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் வித்தியாசமான படங்கள் நிறைய வருகின்றன. இந்தப் படத்தில் கூட கதை சொல்லும் போதே மனதிற்குள் ஊடுருவியது. எல்லாப் படத்திற்கும் நாம் முழு உழைப்பையும் தந்துவிட மாட்டோம். ஒருசில படங்கள் மட்டுமே நாம் அதீத ஈடுபாட்டுடன் நடிக்கும் வகையில் இருக்கும். அந்தவகையில் இப்படத்தில் நான் அதிக ஈடுபாட்டுடன் நடித்தேன்” என படக்குழுவினரை பாராட்டினார்.