சத்யராஜை பார்த்து பயந்த அனுமோலின் அம்மா ; ‘நைட் ஷோ’ கலாட்டா..!

கடந்த 2012ல் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூப்பர்ஹிட் படம் ‘ஷட்டர்’. தற்போது பிசியான குணச்சித்திர நடிகராக மாறிவிட்ட ஜாய்மேத்யூ இயக்கிய, இந்தப்படத்தில் லால், சீனிவாசன், வினய் போர்ட் மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். தற்போது இந்தப்படம் சத்யராஜ் நடிக்க தமிழில் ரீமேக்காகி இருக்கிறது.

எடிட்டர் ஆண்டனி இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். சீனிவாசன் கேரக்டரில் நடித்துள்ளார் யூகிசேது.இந்தப்படத்தில் விலைமாது கேரக்டரில் தமிழில் நடித்து இருப்பவர் மலையாள நடிகை அனுமோல் தான். அதுமட்டுமல்ல, கல்வி நிறுவனங்கள் நடத்திவரும் ஐசரி கணேஷின் மகன் வருண் இதில் ஆட்டோ டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏ.எ.விஜய் மற்றும் ஷாம் பால் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, கௌதம் மேனன், கே.வி.ஆனந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சத்யராஜ், “இந்தக்கதையை என்னிடம் சொன்னபோது மூன்று கேரக்டர்களில் எதில் நடிக்கலாம் என யோசித்தேன்.. ஆனால் என் மகனும் மகளும் தான் என்னை திட்டி, லால் நடித்த கேரக்டரை எடுத்துகொள்ள சொன்னார்கள்.. இந்தப்படத்தில் என்னுடன் நடிக்கும் அனுமோல், நடிப்புக்காக நிறைய விருதுகளை வாங்கி இருக்கிறார் என்றதுமே எனக்கு பயம் வந்துவிட்டது” என்றார்.

தொடர்ந்து பேசும்போது, “அனுமோலின் அம்மா சிறுவயதாக இருக்கும்போது நான் வில்லனாக நடித்த காட்சிகளை பார்த்து பயந்தாராம். இதை அனுமோல் என்னிடம் சொல்லும்போது, ‘சார் எண்டே அம்மா கொச்சு பருவத்தில் நிங்கள்ட படம் கண்டு பேடிக்குமாம்’ என்று சொன்னார். நான் என்னதான் இளமையாக காட்டிக்கொள்ள நினைத்தாலும் கூட, என் வயது எபடி எல்லாம் வெளிப்பட்டு விடுகிறது பாருங்கள்” என்பதையும் காமெடியுடன் சொன்னார் சத்யராஜ்.

சத்யராஜ்நைட் ஷோ