“நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுத்தான் இருக்கின்றன.. ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் சிக்கல் நீடிக்கிறது.. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி பயனில்லை.. நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் தான்” என்கிற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தும் படமாக ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’ என்கிற படம் தயாராகி இருக்கிறது.
மலை மீது வசிக்கிறான் மாமன் மகன்.. மலை அடிவாரத்தில் வசிக்கிறாள் அத்தை மகள்.. இருவருக்கும் காதல்.. ஆனால் பெண்ணின் தகப்பனோ, மலை மீது இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண்ணை தரமாட்டேன் என்று, மலையடிவாரத்திலேயே வசதியான மாப்பிள்ளையாக பார்க்கிறார்.. இதை மீறி இந்த காதல் கைகூடுவதும், இயற்கை ரூபத்தில் விதி அவர்கள் வாழ்வில் விளையாடுவதும் தான் இந்தப்படத்தின் கதை. இது ஒரு உண்மை சம்பவமும் கூட.
இந்தப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகும் இரட்டை இயக்குனர்களான சம்பத்குமாரும் கோனூர் ராஜேந்திரனும். இதில் சம்பத்குமார் ‘வெங்காயம்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் முழுக்க முழுக்க மலையும் மலைசார்ந்த பகுதிகளிலும் மட்டுமே இந்தப்படம் படமாக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவை சேர்ந்த பாலமலை என்கிற பகுதியில் தான் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அடிவாரத்தில் இருந்து மலையில் நடந்தே சென்று 14 கிமீ தூரத்தில் முகாமிட்டு சுமார் 60 நாட்களாக படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். சிவஹரி, அமீதா என்கிற புதுமுகங்கள் இதில் அறிமுகமாகியுள்ளார்கள்.