கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் “நரிவேட்டை” ; ட்ராபிக் ராமசாமி ஆவேசம்..!

பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ட்ராபிக் ராமசாமி, ஒரு சினிமா இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார் என்றால் நிச்சயம் அதில் ஏதோ முக்கியமான விஷயம் இருக்கத்தானே செய்யும்.. அப்படி அவர் கலந்துகொண்டது ‘நரிவேட்டை’ பட இயக்குனர் ஆகாஷ் சுதாகருக்காகவும், அந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.

இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.. சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.. அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர்.

இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.. இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என வாழ்த்தி பேசினார்.

Akash SudhakarNarivettaiTraffic Ramasamyஆகாஷ் சுதாகர்டிராபிக் ராமசாமிநரிவேட்டை