யாரிடமுமே உதவி இயக்குனர்களாக பணியாற்றாமல் நேரடியாக களத்தில் இறங்கி ஒரு படத்தை இயக்கி முடிக்கும் இயக்குனர்களுக்கு மிக முக்கிய சவாலாக, அந்தப்படத்தை எப்படி ரிலீஸ் செய்வது என்கிற பிரச்சனை தான் பூதாகரமாக முன்னால் நிற்கிறது.. ‘முன்னோடி’ என்கிற படத்தை தயாரித்து இயக்கியுள்ள குமாரும் அந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.
சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கும் இவருக்கு சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் படம் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது. 18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டவருக்கு அடுத்த 18 வருஷம் கழித்து தான் சினிமாவில் நுழைய அனுமதி கிடைத்தது.
அப்படிப்பட்டவர் ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கியிருக்கும் படம் தான் ‘முன்னோடி’. யாருமே இந்தப்படத்தை கண்டுகொள்ளாத நிலையில், பாலைவனத்தில் கிடைத்த தண்ணீர் போல, ஒருவழியாக இந்தப்படத்தை பார்ப்பதற்கு தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் சம்மதித்தார்.. முதலில் பாடல்களையும், பின் மொத்த படத்தையும் பார்த்த மதனுக்கு படத்தின் கதையும் அதை படமாக்கிய விதமும் பிரமிப்பை தந்தது. அதனால் இந்தப்படத்தை அவர் தனது பேனரிலேயே தற்போது வெளியிடுகிறார்.