ரவுடி கேரக்டர்களை ஹீரோக்களாக வைத்து படம் எடுப்பவர்கள் எல்லாம் தவறாமல் ஒரு விளக்கம் சொல்வார்கள்.. தெரியாவிட்டால் கீழே உள்ள பாராவை ஒருமுறை படித்துவிட்டு செய்திக்குள் செல்லவும்..
“எந்தவொரு மனிதனும் பிறக்கும்போதே ரவுடியாக பிறப்பதில்லை. அவன் வளரும் சூழல் தான் அவனை ரவுடியாக மாற்றுகிறது. அப்படி சூழ்நிலையால் ரவுடியாக வளரும் ஒருவன் வேறொரு சூழ்நிலையில் மனம் திருந்தி நல்லவனாக மாற முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா?”
இந்த வாக்கியங்களை கேட்டிருக்கிறீர்கள் தானே.. இதை உணர்ச்சிகரமாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் படம் தான் ’முன்னோடி’. இந்த முன்னோடி படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் தெலுங்கு தேசத்தை சேர்ந்த ஹரிஷ். இவர் பாகுபலி பிரபாஸின் உறவினர் ஆவார். நாயகியாக அதே தெலுங்கு தேசத்தை சேர்ந்த யாமினி பாஸ்கர் அறிமுகமாகிறார்.
இவர்கள் இருவருமே தெலுங்கில் நடித்துக்கொண்டிருப்பவர்கள். தமிழுக்கு புதிதாக அறிமுகமாகிறார்கள். படத்தில் வில்லன்களாக கங்காரு படத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனா, குற்றம் கடிதல் படத்தில் குணச்சித்திர நடிப்பால் நம் மனதைக் கவர்ந்த பாவல் நவநீதன் இருவரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் எஸ்.பி.டி.ஏ.குமார். தொழிலதிபரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் யாரிடமும் அசிஸ்டெண்டாக பணிபுரியாமல் இயக்குனர் ஆகியிருக்கிறார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் முழுக்க முழுக்க கிராபிக்ஸ் காட்சிகளால் எடுத்து தன் திறமையைக் காட்டியிருக்கிறார் எஸ்பிடிஏ.குமார்.