மறைந்த திரையிசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு தமிழ்நாடு திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. இசைஞானி இளையராஜா முன்னிலை வகிக்க, இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கவிஞர் முத்துலிங்கம், பெஃப்சி தலைவர் சிவா, ஆகியோர் கலந்து கொண்டனர். தவிர இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். இசைஞானி இளையராஜா எம்.எஸ்.வி.யின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.
“இந்த சங்கம் உருவாவதற்கு முக்கிய காரணமே அண்ணன் எம்,.எஸ்.வி தான்.. அப்போதெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் முழு சம்பளம் கிடைக்கும். அண்ணன் சாப்பிட மறந்து போய் உழைத்துக்கொண்டிருப்பார். ஆனால் அவரிடம் டியூன் வாங்குவதில் குறியாக இருந்தவர்கள் அவர் நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்ததில்லை. இதை அண்ணன் உணர்ந்திருந்ததனால்தான் இந்த சங்கம் தோன்றியது. சாப்பிடக்கூட நேரமே இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்த இசைக்கலைஞர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தையும், அந்த இடத்திலேயே சம்பளம் கிடைக்கும் முறையை கொண்டுவருவதர்கு மூலகாரணமாக இருந்தவர் அண்ணன் எம்.எஸ்.வி. தான்” என இசைக்கலைஞர்கள் சங்கம் உருவான காரணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் இளையராஜா.