கடந்த வியாழனன்று லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டினார். இதுவரை லாரன்ஸின் நடிப்பையும், நடனத்தையும் சிலாகித்து வந்த ரஜினி, இந்தப்படத்தில் அவரது ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினாராம்.
இந்த சந்திப்பு குறித்து படத்தின் இயக்குனர் சாய்ரமணி கூறும்போது, “சூப்பர்ஸ்டாரின் ரசிகனான நான், சூப்பர்ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். மக்கள் சூப்பர் ஸ்டார் டைட்டில் பிரச்சனையால் நான் மிகவும் கவலைப்பட்டிருந்தேன். இந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு எங்களை அழைத்தார்.. அப்பொழுது அவரிடம் மக்கள் சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கான விளக்கத்தை தெரிவித்தேன் ஆனால் சூப்பர் ஸ்டாரோ என்னையும் எனது படத்தையும் மனதார பாராட்டியதும் எனது அடுத்த படத்திற்கும் வாழ்த்து தெரிவித்ததும் எனது வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று” என பிரமிப்பு விலகாமல் கூறியுள்ளார்.