இஸ்லாம் மதத்திற்கு மாறினார் ‘அழகி’ மோனிகா..! சினிமாவை விட்டும் ஒதுங்குகிறார்

‘அழகி’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடிகொண்ட அழகி மோனிகா, தான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருப்பதாக சொல்லி நமக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார். ‘அவசரபோலீஸ் 100’ படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கிட்டத்தட்ட 65 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட 26 வயதான மோனிகா, திடீரென இஸ்லாம் மதத்திற்கு மாறவேண்டிய காரணம் என்ன?

“இது திடீரென எடுத்த முடிவு இல்லை.. அப்பா கிறிஸ்டியன்.. அம்மா இந்து.. இந்த நிலையில் மதம் மாறுவது என்ன சாதாராண விஷயமா? ஆனால் நன்றாக யோசித்துத்தான், நானாக விருப்பப்பட்டுதான் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கிறேன். சொல்லப்போனால் 2010லேயே நான் இஸ்லாமிற்கு மாறிவிட்டேன்.. இவ்வளவு நாள் என் குடும்பம் மற்றும் உறவுகளை கன்வின்ஸ் செய்யவேண்டியிருந்தது. அதனால் தான் இப்போது அறிவிக்கிறேன். இனிமேல் நான் மோனிகா இல்லை.. எம்.ஜி.ரஹிமா” என்கிறார் மோனிகா..

முஸ்லீம் பையன் யாரையாவது லவ் பண்ணி, அவரை திருமணம் செய்வதற்காக வேண்டி மதம் மாறுகிறீர்களா என்று கேட்டால் சிரிக்கிறார்.. “காதலுக்காக மதம் மாறுவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். 2007ல் என் தந்தை இறந்தபிறகு வெளி இடங்களுக்கு போவதற்காக பர்தா அணியத்தொடங்கினேன்.. அதை அணியாத நேரங்களில் ஏதோ இழந்தது போல இருந்தது,. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாம் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அதன் கோட்பாடுகள் எனக்கு பிடித்திருந்தது. மலேசியாவில் இருக்கும் ஹசன் அண்ணா மூலம் இஸ்லாம் பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன். அதனால் முழு மனதோடுதான் நான் இஸ்லாத்திற்கு மாறியிருக்கிறேன்” என இஸ்லாம் தன்னை ஈர்த்ததற்கான காரணங்களை அடுக்குகிறார் மோனிகா @ ரஹிமா.

கூடவே இனிமேல் சினிமாவில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு அதிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கப்போவதாகவும் இன்னொரு அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார் மோனிகா. காரணம் “வீட்டில் திருமணத்துக்கு வற்புறுத்துவதால் எப்படியும் இந்த வருட இறுதிக்குள் திருமணம் பேசி முடித்துவிடுவார்கள். திருமணத்துக்குப்பின் சினிமாவில் நடிப்பது சரியாக இருக்காது. இனி குடும்ப வாழ்க்கையில் நுழையப்போகிறேன்” என்கிறார். வாழ்த்துக்கள் மோனிகா,, ஸாரி.. எம்.ஜி.ரஹிமா..

AzhakiislamMonika