பத்தில் ஐந்து பேருக்கு நடிப்பு ஆர்வம் இருக்கவே செய்யும்.. அதற்கு வடிகால் தரும் விதமாக மொபைல் போனும் சோஷியல் மீடியாவும் கைகொடுக்க, இன்று பலரும் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் இருக்கும் நடிகனை, நடிகையை வெளிக்கொண்டுவந்து சமூக வலைதளங்களில் உலவ விட்டு திருப்திப்பட்டு கொள்கிறார்கள். டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினியும் அப்படித்தான் தனது டப்ஸ்மாஷ் மூலமாக புகழ்பெற்றார்..
ஆனால் அவர் செய்த ‘டப்ஸ்மாஷ்’களே அவருக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பை வாங்கித்தரும் என அவர் எப்போதாவது நினைத்திருப்பாரா..?.. ஆம்.. ‘நகல்’ படத்தில் ‘ஒற்றை கதாபாத்திரத்தில்’ நடிக்க சில முன்னணி நாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த இயக்குனர் சுரேஷ் குமாரின் கண்களில் மிருனாளினியின் டப்ஸ்மாஷ் தட்டுப்பட்டிருக்கிறது.
அவரை அழைத்து ஆடிசன் வைத்தவருக்கு முழு திருப்தி ஏற்படவே, தற்போது ‘நகல்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மிருணாளினி. சரி, அது என்ன.. ‘ஒற்றை கதாபாத்திரம்’..? “ஒரு பெண்ணின் அமானுஷ்ய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது” என்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார்.