‘மன்னர் வகையறா’வில் சரண்யாவுக்காகவே டெவலப் பண்ணப்பட்ட காட்சிகள்..!

கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.

அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல்-ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன-26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன்

“மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை முன்னிலைப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. சண்டையோ, அடிதடியோ அது எதுவானாலும் குடும்பத்தினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக அதேசமயம் அனைத்தையும் பாசிடிவாகவே இதில் அணுகியிருக்கிறோம்..

இந்தப்படத்தில் ஏன் இவ்வளவு நட்சத்திரங்கள்.. ஸ்டார் வேல்யூவை ஏற்றுவதற்காகவா என பலரும் கேட்கிறார்கள். இந்த கதையை பொறுத்தவரை ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு பின்புலம் இருக்கும். அதை தாங்கி நடிக்கவேண்டும் என்றால் அது குறிப்பிட்ட ஒரு சிலரால் தான் முடியும். பிரபு சார் இதுவரை உருவாக்கி வைத்துள்ள இமேஜ் தான் அவரது கேரக்டருக்கு பலம் சேர்த்திருக்கிறது. அப்படித்தான் இதற்குள் அனைத்து நட்சத்திரங்களும் வந்தார்கள்.

இதில் சரண்யாவுக்கு மட்டும் தான் அவரது காட்சிகளை டெவலப் செய்து எழுதினேன். அதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்தில் குடும்பத்து நபர்களுக்குள் நடக்கும் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும். அதில் சரண்யாவின் கேரக்டர் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் அவரிடம் அவரது கேரக்டர் பற்றி சொல்லி, நீங்கள் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் மட்டும் தான், இன்னும் இதை டெவலப் செய்து மாற்ற முடியும் என கூறினேன்.. அவரும் சூப்பர்..சூப்பர் என சம்மதம் தெரிவித்தார்” என்றார் பூபதி பாண்டியன்.

Mannar VagaiyaraSaranyaVemalசரண்யாமன்னர் வகையறாவிமல்