உறவுகளை தொலைத்துவிட்டு இயந்திர வாழ்க்கை வாழும் நகரத்து மனிதர்களுக்கு தாங்கள் தொலைத்தது என்ன என்பதை சாட்டையடியாய் விளக்கியிருக்கும் படம் தான் மஞ்சப்பை’.
அமெரிக்கா செல்லவேண்டும் என்கிற கனவுடன் சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலைபார்க்கும் விமலுக்கு அவரது ஒரே உறவு கிராமத்தில் இருக்கும் அவரது தாத்தா ராஜ்கிரண் தான். வெள்ளந்தியான அந்த மனிதர் பேரனை பார்க்க நகரத்துக்கு வருகிறார். ஆனால் விமல் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் மட்டுமல்ல, விமல் காதலிக்கும் லட்சுமி மேனனும் கூட தாத்தாவின் வெகுளித்தனமான அன்பை புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
ஆனால் அதற்கெல்லாம் தனது தாத்தாவை விட்டுக்கொடுக்காமல் சப்பைகட்டு கட்டும் விமலுக்கு எதிராகவே ஒருகட்டத்தில் தாத்தாவின் வெள்ளந்தி நடவடிக்கைகள் அமைந்து விடுகின்றன. இறுதியில் அது அவரது எதிர்கால கனவிற்கும் வேட்டுவைக்க, தாத்தாவின் மீது வெறுப்பை அள்ளி வீசுகிறார். அந்த வெறுப்பு தாத்தாவை என்ன செய்தது என்பது நெஞ்சை நெகிழவைக்கும் க்ளைமாக்ஸ்.
தாத்தா-பேரன் என்ற கதைக்களமே படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. விமல் தனது முந்தைய சில படங்களில் இருந்து சற்று மாறுபட்டு அனைத்து இடங்களிலும் ரசிக்கும்படி நடித்திருக்கிறார். தாத்தாவுடனான குழைவில் சற்று செயற்கைத்தனம் எட்டிப்பார்த்தாலும் லட்சுமி மேனனிடம் ‘என்னடி பெரிய மயிறு மாதிரி பேசிக்கிட்டு இருக்குற’ என எகிறும்போதும், கனவு சிதைந்துவிட்ட வெறுப்பில், தன் தாத்தா தனது கையை பிடிக்கும்போது ‘விடுய்யா.. பெரிசா புடிக்கவந்துட்ட” என வெறுப்பில் உதறும்போதும் வெல்டன் விமல்.
கதையின் உயிர்நாடியே தாத்தா ராஜ்கிரண் தான். பல காட்சிகளில் தனது நடிப்பால் அனைவரையும் நெகிழவைத்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதரிடமும் அவர் பரிவுகாட்டுவது இன்றைய நகரத்தில் நாம் தொல்லைத்துவிட்ட, பார்க்கமுடியாத ஒன்று. ஆனால் என்னதான் வெள்ளந்தி மனிதர் என்றாலும் யாரென்றே தெரியாத, அதுவும் ஒரு போலீஸ்காரரை அறைவது எல்லாம் கொஞ்சம் ஓவர்தான். ஆனால் க்ளைமாக்ஸில் அந்த பத்து நிமிடம் நம்மை பதைபதைக்க வைத்துவிடுகிறார் மனிதர்.
லட்சுமி மேனன்.. ஈஸியாக காதலித்து காதலனுடன் டூயட் பாடிவிட்டுப்போகக்கூடிய ரோல்தான். என்றாலும் விமல் மற்றும் தாத்தாவின் மீது கோபம்கொள்ளும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் வரை தாத்தவின் மீதான வெறுப்பை அவர் மெயிண்டன் பண்ணுவது அவரது கேரக்டரை பலப்படுத்துகிறது.
வழக்கமாக தான் நடிக்கும் படங்களில் காமெடி சீன்களில் வந்து மொக்கை வாங்கும் ‘காதல்’ சரவணனுக்கு இதில் படம் முழுவதும் வந்துபோகும் குணச்சித்திர வேடம். அதை ராஜ்கிரணுடன் சேர்ந்து அற்புதமாக பிரதிபலித்திருக்கிறார்.
கும்கி அஸ்வின், எல்.எம்.வி சுவாமிநாதன் உட்பட படத்தின் மிக முக்கியமான கேரக்டர்களும் நிறைவுதான். ரகுநந்தன் இசையில் ‘ஆகாச நிலவுதான்’ பாடலில் எண்பதுகளின் இளையராஜா எட்டிப்பார்த்துவிட்டு போகிறார். ‘பார்த்து பார்த்து’ பாடலும் பார்க்க பார்க்க பிடிக்கும். மசானியின் ஒளிப்பதிவும் நேர்த்திதான்.
அறிமுக இயக்குனர் ராகவன் காதல், ஆக்ஷன், வன்முறை என தனது பயணத்தை தொடங்காமல் தாத்தா, பேரன் என உணர்வுப்பூர்வமான ஒரு கதையை கையில் எடுத்திருப்பதற்காகவே பாராட்டப்பட வேண்டியவர். அதேபோல படத்திலும் அவர்களை விட்டு கதையை நகர்த்தாமல் கொண்டு சென்றிருப்பதும் சரிதான்.
ஆனால் தாத்தாவின் அப்பாவித்தனங்களும் வெகுளித்தனமும் பல காட்சிகளில் இப்படியும் ஒரு கிராமத்து மனிதர் இருப்பாரா என்பது கொஞ்சம் மிகையாகவே தோன்றுகிறது. க்ளைமாக்ஸ் சற்று எதிர்பாராததுதான் என்றாலும் காம்ப்ரமைஸ் செய்யாமல் வைத்ததற்காக இயக்குனரி பாராட்டலாம். நகரத்தில் உள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.