‘சந்தோஷ் சுப்ரமண்யம்’ படத்தில் புரபசராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை மாணவர் ஒருவர் ‘யோவ் கூத்தபெருமாள்’ என அவர் பெயரைச்சொல்லி கிண்டல் அடிப்பார்.. அப்போது கோபப்படும் எம்.எஸ்.பாஸ்கரிடம் சந்தானம் சொல்லுவார், “நான் உன்னை சறுக்குமரம்னு பட்டப்பேர் வச்சுக் கூப்பிட்டப்ப உனக்கு கோபம் வரலை.. ஆனா உன் பேரைச்சொல்லிக் கூப்பிட்டதும் கோபம் வருதோ” என்பார்.
அதுமாதிரித்தான் இப்போது ‘த்ரிஷ்யம்’ படத்தின் இந்தி மற்றும் தமிழ் ரீமேக்குகளுக்கு எதிராக கிளம்பும் ஆட்களையும் பார்க்கத் தோன்றுகிறது. சமீபத்தில் தான், பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் நாங்கள் இந்தியில் படமாக்க வாங்கி வைத்திருக்கும் ஜப்பானிய நாவலின் கதையைப் போலவே ‘த்ரிஷயம்’ படம் இருப்பதால் அதன் இந்தி ரீமேக்கிற்கு தடைவிதிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மலையாள இயக்குனரான சதீஷ் பால் என்பவர் ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்கு தடைவிதிக்கவேண்டும் என புகார் அனுப்பியுள்ளார். காரணம் தான் இயக்கிய ‘ஒரு மழக்காலத்து’ படத்தின் கதையும் த்ரிஷயத்தின் கதையும் ஒரே தளத்தில் அமைந்துள்ளது என்றும் தனது படத்தை தமிழில் ‘க்ரைம் த்ரில்லர்’ என்ற பெயரில் தான் ரீமேக் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதனால் அதேபோன்ற கதை அமைப்புடன் உள்ள ‘த்ரிஷ்யம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இந்த புகார்களுக்கு ‘த்ரிஷ்யம்’ இயக்குனர் மறுமொழி கூறியுள்ளார்.. அது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி புகார் அளித்திருக்கும் சதீஷ்பால் ஏன் ‘த்ரிஷ்யம்’ படம் மலையாளத்தில் வெளியானபோதே எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை.. அதுவும் தவிர இவ்வளவு நாள் காத்திருந்துவிட்டு, இப்போது தமிழில் அதன் ரீமேக்கிற்காக கமலை வைத்து பூஜையெல்லாம் போட்ட பிறகு திடீரென முட்டையை குடிக்க புற்றிலிருந்து வரும் பாம்பு போல புறப்பட்டு போர்க்கொடி உயர்த்தி வருவதன் பின்னணி என்ன.? இப்படிப்பட்ட முட்டாள்களும் மலையாள திரையுலகில் இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இப்போ மேலே சொன்ன எம்.எஸ்.பாஸ்கர் ஜோக்கை ஒருமுறை நினைவுபடுத்தி பாருங்கள்..