’மகாசேனா’ விமர்சனம்

நடிகர்கள் : விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், மஹிமா குப்தா, விஜய் சேயோன், அல்ஃப்ரெட் ஜோஸ், சுபாங்கி ஜா. சிவகிருஷ்ணா. இலக்கியா
இசை : ஏ.பிரவீன் குமார்- பின்னணி இசை – உதய் பிரகாஷ் U P R
ஒளிப்பதிவாளர் – மனாஸ் பாபு.டி.ஆர்
இயக்கம் : தினேஷ் கலைச்செல்வன்
தயாரிப்பு : மருதம் புரொடக்ஷன்ஸ்

பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை வளர்க்கிறார். அவரது மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியின மக்களை வைத்து திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகளை தாக்கிவிட்டு காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவில் சிலை கடத்தல் திட்டத்தை முறியடித்தாரா ? , காட்டுக்குள் சென்ற யானை என்னவானது ? என்பது தான் படத்தின் கதை.

கதையின் நாயகனாக பழங்குடியினராக நடித்திருக்கும் விமல், வழக்கம் போல் அலட்டிக் கொள்ளாமல் தனது கதாபாத்திரத்தை சாதாரணமாக கையாண்டுள்ளார்.

நாயகியாக நடித்திருக்கும் சிருஷ்டி டாங்கே, பழங்குடியின பெண்ணாகவும், வீரம் மிக்கவராகவும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகளில் சில சிரிக்க வைத்தாலும், நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை.

வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு.டி.ஆர், காட்சிகளை படமாக்கிய விதம் படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் காட்டியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஏ.பிரவீன் குமாரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் U P R-ன் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்.

இயற்கையை நேசிக்க வேண்டும், வனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், முழுக்க முழுக்க கமர்ஷியலாக படத்தை நகர்த்தி சென்றிருக்கிறார்.

யானை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்ட விதம், சிலை கடத்தல் மற்றும் அதன் பின்னணி ஆகியவற்றுடன் கல்லூரி மாணவர்களின் மலை ஏறுதல் என மூன்று விதமான கிளைக்கதைகளை இணைத்து ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் கலைச்செல்வன், திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘மகாசேனா’ மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்.

ரேட்டிங் 3/5

mahasena movie reviewmahasena reviewtamil movie mahasena review