இயக்குனர்களுக்கு ‘மகளிர் மட்டும்’ விழாவில் ஜோதிகா வைத்த வேண்டுகோள்..!

‘36 வயதினிலே’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகளிர் மட்டும்’.. இந்தப்படத்தில் ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா என மூன்றும் இன்னும் மூன்று கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படத்தை குற்றம் கடிதல்’ இயக்குனர் பிரம்மா இயக்கியுள்ளார்..

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு ‘மகளிர் மட்டும்’ இசையை சூர்யாவின் தாயார் லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தர பாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள். விழாவில் நாயகி ஜோதிகா பேசியபோது இன்றைய இயக்குனர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்தார்..

“தமிழ் திரையுலகில் திருமணமானபின் நடிக்க வரும் நாயகி என்றாலே 30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள். பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே அணுகியுள்ளார்கள். ஆனால் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுத்திருப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும் தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

முழுக்கதையோடு பிரம்மா என்னை அணுகினார். திருமணமாகாத பெண்ணாக நடிக்க வேண்டும், டூவீலர் ஓட்ட வேண்டும் என்று முதலில் சொன்னார். அப்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பெண்களை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகியிருப்பதற்கு பிரம்மாவிற்கு நன்றி.

பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். அம்மா, தங்கச்சி, மனைவி என உங்களைச் சுற்றியிருக்கும் பெண்களின் கதாபாத்திரங்களை படங்களின் நாயகிக்கு கொடுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும்.

தயவு செய்து கொஞ்சம் அறிவாளித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். மிக கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள்.

ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நம்மளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என முத்தாய்ப்பாக முடித்தார் ஜோதிகா.

JyothikaMagalir Mattumசிவக்குமார்ஜிப்ரான்ஜோதிகாபிரம்மாமகளிர் மட்டும்