லாரன்ஸின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாகும் அதிசயம்..!

லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா-2’ கடந்த 2015 ஏப்ரலில் வெளியானது.. அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளி விழுந்துவிட்ட நிலையில் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து லாரன்ஸ் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு நடித்திருக்கும் படம் ‘சிவலிங்கா’. கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் வெற்றிபெற்று தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், லாரன்ஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தையும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சாய்ரமணி இயக்கியுள்ள இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தில் லாரன்ஸ் போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார். ஒரு நடிகரின் இரண்டு படங்கள் ஒரேநாளில் வெளியாவது அபூர்வம்.. அப்படி வெளியானாலும் ஏதோ ஒன்றுதான் வெற்றி பெரும் என்பது இதற்கு முந்தைய வரலாறு..

கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மற்றும் கிழக்கு மலை ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகின.. உள்ளத்தை அள்ளித்தா மட்டும் சூப்பர் டூப்பர்ஹிட்டானது. அதேபோல பரத் நடித்த வெயில் மற்றும் சென்னைக்காதல் இரண்டும் ஒரே நாளில் வெளியானதில் வெயில் மட்டும் ஹிட்டானது.. ஆனால் லாரன்ஸின் இரண்டு படங்களில் ‘சிவலிங்கா’ ஹாரர் த்ரில்லராகவும், ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் போலீஸ் ஸ்டோரியாகவும் உருவாகி இருப்பதால் இரண்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

LawrenceMSKSSivalingaஆர்.பி.சௌத்ரிஉள்ளத்தை அள்ளித்தாகாஞ்சனா-2கிழக்கு மலைசக்தி வாசுசாய்ரமணிசிவலிங்காசூப்பர் குட் பிலிம்ஸ்சென்னைக்காதல்நிக்கி கல்ராணிபரத்பி.வாசுமொட்ட சிவா கெட்ட சிவாராகவா லாரன்ஸ்ரித்திகா சிங்லாரன்ஸ்வெயில்