அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூட்டத்தில் ஒருவன்’.. இந்தப்படத்தின் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் விகடன் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் துவங்க காரணமாக இருந்தவரும், அதற்கு அகரம் என பெயர் வைத்தவரும் இந்த ஞானவேல் தான்.
தற்போது ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை புரமோட் பண்ணும் பாடல் ஒன்றில் சினிமாவில் முன்னணி கலைஞர்கள் பலர் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள மாற்றம் ஒன்றே மாறாதது பாடல், ஒவ்வொரு பூக்களுமே பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக அமைந்துள்ளது.
இப்பாடலில் வரும் வரியான “உன் கேள்விக்கு விடை நீயடா, மண்பானையாய் உடையாதடா“ ,தோல்வியெல்லாம் தோல்வியல்ல, வெற்றி என்றும் தூரமல்ல” போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக்கூடிய வரிகளாக இருக்கும். இப்பாடலை படமாக்கும் போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள்.
அதனால் இந்த கிப்ட் பாடலை படத்துக்குள்ளே மட்டும் வைக்காமல் , இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தார் இயக்குனர் ஞானவேல். ‘கொலைவெறி டி’ பாடல் எப்படி ஒரு சூப் சாங்காக இருந்ததோ அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும்.
இது பற்றி ஞானவேல் கூறுகையில், “இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில் தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லகூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். அந்த பாடலை வருகிற ஜூன் 2௦ விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம்பெற்றுள்ள விஷுவல்ஸ் படத்தில் இடம்பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் விஷுவல்சை எடுத்துள்ளோம்” என கூறியுள்ளார்.
இந்தப்பாடலில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனர், நடிகர் சூர்யா, ஆர்யா , சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ்ராஜ், சிவகுமார், விஷ்ணு விஷால், சமுத்திரகனி, ஆர்.ஜே.பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், வி,ஐடி கல்லூரி மாணவர்கள் போன்ற பலர் இப்பாடலில் இடம்பெற்றுள்ளனர்.