யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்.. என சொல்வதுபோல, இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நம்முடன் இல்லாவிட்டாலும் கூட அவரது படங்கள் அவ்வப்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரிலீஸாகி வசூலை வாரி குவித்து வருகின்றன.
தற்போது ஒரு படி மேலாக, அவர் நடிக்கும் படம் ஒன்றே ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்கிற பெயரில் படமாக இருக்கிறது.. ஆம்.. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைத் தொடர்ந்து வெளிநாட்டு காட்சிகளுடன் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ படத்தை படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வரான பிறகு எம்ஜிஆரின் இந்த கனவு கைகூடாமலேயே போனது.
இந்த நிலையில், எம்ஜிஆரின் மிகவும் நெருக்கமான நகைச்சுவை நடிகரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். அருள்மூர்த்தி என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முழுவதும் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ளது.
இப்படத்தின் தொடக்கவுள்ள எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பூஜை போட்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கிவைத்துள்ளார். அடையாறில் உள்ள எம்ஜிஆர் சத்யா ஸ்டுடியோவில் இப்படத்தின் படபிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.