ஏலத்துக்கு வரவில்லை ; கவிதாலாயா விளக்கம்..!

ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபல பெரிய ஹீரோக்களையும், ஹீரோயினிகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் படத்தில்தான் ரஜினி அறிமுகமானார். அதேபோல், கமல்ஹாசனை வைத்து பல வித்தியாசமான கதைக் களங்களை சினிமாவில் உருவாக்கியவர் பாலச்சந்தர்.

இயக்கத்தோடு மட்டும் நிற்காமல் ‘புன்னகை மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘ரோஜா’, ‘முத்து’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கவிதாலயா நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்தார் கே. பாலசந்தர்.

இந்நிலையில், கவிதாலயா புரடெக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் சார்பில் வங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை செலுத்தப்படாததால், அந்நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏலத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை என மறுத்துள்ள கவிதாலயா நிறுவனம், இதில் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்க அறிக்கையாக வெளியிட்டுள்ளார்கள்.

அதில், “கவிதாலயா நிறுவனத்தின் வீடு, மற்றும் அலுவலகம் ஏலம் விடப்படுவதாக வந்திருக்கும் பத்திரிகை செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கடந்த 2010-ம் ஆண்டு டிவி தொடர் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் குடும்பத்தினரின் வேறு சொத்துகளை அடமானம் வைத்து கடன் வாங்கப்பட்டது. பின்னர் 2015-ல் தயாரிப்புகளை நிறுத்திய பிறகு, முதலும் வட்டியும் சேர்த்து கணிசமான தொகை செலுத்தப்பட்டுவிட்டது.

எனினும் மீதமுள்ள கடன் தொகையைச் செலுத்துவதற்காக வங்கியுடன் சட்டரீதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சமயத்தில் வெளியான வங்கி விளம்பரத்தைப் பார்த்து கவிதாலயாவின் சொத்துகள் ஏலத்துக்கு வந்துவிட்டன என்று தவறான செய்தி பரவிவருகிறது. இது முற்றிலும் உண்மையில்லை. எங்கள் மீது அன்பு கொண்டவர்கள் இந்தத் தவறான செய்தியைக் கண்டு கலக்கமடைய வேண்டாம்” எனத் கூறப்பட்டுள்ளது.

K BalachandarKavithalaya Productionகவிதாலாயாகே.பாலசந்தர்