‘கத்தி சண்டை’ விவகாரத்தில் ஆட்டோக்காரர்களுக்கு ஆதரவாக விஷால்…!

இன்றைய தேதியில் ஒரு படம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது என்றால் அதன் காலைக்காட்சிக்கு வரும் ஹைடெக் இளைஞர் கும்பல், பேஸ்புக், வாட்ஸ் அப்களிலேயே ‘மச்சான் படம் சூப்பர்டா’ என்றோ ‘உள்ள வந்துடாத மாப்ளே.. கொல்றானுங்க’ என்றோ இரண்டு மூன்று வார்த்தை ஸ்டேட்டஸ்களில் ஒரு படத்தின் வசூலையே காலி பண்ணி விடுகிறார்கள்..

ஆனால் பல வருடங்களாக ஒரு படத்தின் அருமை பெருமைகள் அனைத்தும் மவுத் டாக் பப்ளிசிட்டி மூலமாக பரவ காரணமாக இருப்பவர்கள் முக்கியமாக ஆட்டோ ஓட்டுனர்கள் தான்.. இவர்களில் பெரும்பாலான நபர்கள் ரிலீஸ் தினத்தன்றே காலைக்காட்சி பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள்.. இவர்கள் படம் பார்த்துவிட்டு, தங்களது ஆட்டோவில் பயணிப்பவர்களிடம் வாய்மொழியாக படத்தை பற்றி சொல்ல, அதுதான் அப்படியே மவுத் பப்ளிசிட்டியாக மற்றவர்களிடம் பரவுகிறது.

ஆனால் சென்னை மற்றும் சில நகரங்களில் ஆட்டோக்களை தியேட்டர்களுக்குள் பார்க்கிங் செய்ய அனுமதிப்பதில்லை என்பதே உண்மை.. அதேசமயம் ஆட்டோவை வேறெங்கோ விட்டுவிட்டு தனியாக வந்து படம் பார்க்க ஆட்டோ ட்ரைவர்கள் விரும்புவதும் இல்லை.

இந்தநிலையை மாற்ற விரும்பிய விஷால், சமீபத்தில் நடைபெற்ற ‘கத்தி சண்டை’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஆட்டோக்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கவேண்டும் என்பதை தியேட்டர்காரர்களிடம் இதை ஒரு கோரிக்கையாகவே வைத்துள்ளார். விஷால், தமன்னா, வடிவேலு, சூரி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். வரும் டிச-23ஆம் தேதி ‘கத்தி சண்டை’ படம் வெளியாக இருக்கிறது.

Kaththi SandaiSurajTamannaahVadiveluVishalகத்தி சண்டைசுராஜ்தமன்னாவடிவேலுவிஷால்