“ஜல்லிக்கட்டு’ தொந்தரவு கொடுக்கும் விழா அல்ல” – கமல்..!


ஜல்லிக்கட்டை தடைசெய்யவேண்டும் என பலர் வற்புறுத்திவரும் நிலையில் ‘ஜல்லிக்கட்டு’ தொந்தரவு கொடுக்கும் விழா அல்ல என கூறியுள்ளார் உலகநாயகன் கமல்.. கமல் இந்த வார்த்தைகளை பேச களம் அமைத்து கொடுத்தது சென்னையில் புகைப்படக் கலைஞர் சுரேஷ், தான் எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களை ‘வீர விளையாட்டு’ என்ற பெயரில் வைத்துள்ள கண்காட்சிதான்.

இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த கமல், “ஜல்லிக்கட்டு’ தொந்தரவு பண்ற விழா என்று பல பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளைப் பொறுத்தவரையில் அது உண்மையாக இருக்கலாம். அதில் மிருகங்களுக்கான எந்த ஒரு வாய்ப்பையும் கொடுப்பதே இல்லை. தமிழ்நாட்டில் கூட மாட்டின் மீது ஆணியை வைத்து கீறிவிட்டால் அவன் வீரன் கிடையாது. இதற்கு பெயர் ‘ஜல்லிக்கட்டு’ என்று வைத்திருக்கிறார்களே தவிர, தமிழில் நிஜப்பெயர் ‘ஏறு தழுவுதல்’ என்பது தான்” என குறிப்பிட்ட கமல், ஜல்லிக்கட்டு விளையாட்டு பிறந்ததற்கான உண்மையான நோக்கத்தையும் விளக்கியுள்ளார்.

“அமைதியான காலங்களில், நமது இளைஞர்கள் மோதலுக்கு பயந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுடைய தசைகளை பதம் பார்க்கும் வீர விளையாட்டாக தான் இந்த விளையாட்டு இருந்திருக்கிறது. ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்பது தான் என்னைப் போன்ற சிலரின் கோரிக்கையும். இந்தக் கண்காட்சிக்கு நான் வந்ததற்குக் காரணம், இந்த புராதன விஷயம் நவீன மேற்கத்திய சிந்தனைகளால் அடிபட்டு போய்விடக் கூடாது என்பதுதான்” என கூறியுள்ளார் கமல்.

மேலும், “இதை ஒரு பண்பாட்டு கலாச்சார விளையாட்டாக நினைத்துக் கொண்டு, இதை தக்கவைக்க வேண்டும் என்பது என்னைப் போன்ற ஏறு தழுவும் தமிழர்களின் வேண்டுகோள்” என கோரிக்கையும் வைத்துள்ளார் கமல். நவம்பர் 8ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெற இருக்கிறது.

Eru thazhuvuthalJallikattuKamal