இசைஞானி இசையமைத்துள்ள 1005வது படம் தான் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.. இதில் கிஷோர், யக்னா ஷெட்டி, சுலீல் குமார், மிதுன், அஜய்ரத்னம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த செப்-15ஆம் தேதியன்றே வெளியாக இருந்தது. ஆனால் சரியான எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்டப்போது, அனைத்து பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்றது.. தற்போது களத்தூர் கிராமம் வரும் அக்-6ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது
படப்பிடிப்பு நடந்தபோது நடைபெற்ற ஆச்சர்யமான சம்பவம் ஒன்றை விவரிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சீனுராஜ்.
“ஒருநாள் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென மழைபெய்ய ஆரம்பித்தது.. அன்றைய தினம் மிக முக்கியமான காட்சியை படமாக்க வேண்டி இருந்தது. இதற்காக கிஷோர் சுமார் ஆறு மணி நேரம் மேக்கப் போட்டு தயாராகி இருந்தார், இந்த நிலையில் மழை பெய்ய ஆரம்பித்ததும், என்ன செய்வதென தெரியாத நிலையில், படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தனர்..
சொன்னால் நம்ப மாட்டீர்கள் அடுத்த சில நிமிடங்களிலேயே மழை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சுத்தமாக நின்றே விட்டது.. நாங்கள் படப்பிடிப்பை தடங்கலின்றி நடத்தி முடித்தோம்.. ஆனால் இதைவிட ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் படப்படிப்பு நடத்திய கிராமத்தை தவிர சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாம் மழை விடாமல் கொட்டித்தீர்த்தது தான் பிரார்த்தனைக்கு பலன் உண்டு என உணர்ந்துகொண்ட முக்கிய தருணம் அது.
களத்தூர் கிராமம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்தால் படம் இன்னும் மக்களிடம் எளிதாக சென்று சேரும் என விரும்பி அவரை சந்தித்தபோது எங்களிடம் ஒரே ஒரு நிபந்தனை விதித்தார். கதை நன்றாக இருக்கிறது, ஆனால் படத்தை நீங்கள் எப்படி எடுப்பீர்கள் எனத்தெரியாது. படத்தை எடுத்துவிட்டு வந்து காட்டுங்கள். அதைப் பார்த்துவிட்டு பிறகு முடிவு செய்கிறேன்’ என சொல்லிவிட்டார்.
அவர் சொன்னபடி, படத்தை எடுத்து முடித்து அவரிடம் காட்டினோம். படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகப் பாராட்டியவர், இது எனக்கான படம், எனக்கான வேலைகள் இதில் நிறைய இருக்கிறது என உடனே இசையமைக்கவும் ஒப்புக்கொண்டார்.
மேலும் இந்தப்படத்திற்காகத் தனி ஈடுபாடு காட்டி, மூன்று பாடல்களுக்கும் சிறப்பாக இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்ல படத்தின்பால் ஈர்க்கப்பட்டு அவரே ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார்”.