முரளி நடித்த படத்தை மராத்தியில் ரீமேக் செய்கிறார் மு.களஞ்சியம்..!


1996ல் முரளி, பிரகாஷ்ராஜ், தேவயானி நடித்த சூப்பர்ஹிட் படமான பூமணி’யை இயக்கிய மு.களஞ்சியம் விரைவில் அந்தப்படத்தை மராத்தியில் அதுல்குல்கர்ணியை வைத்து இயக்க உள்ளார். அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுதவிர தற்போது ‘களவு தொழிற்சாலை’ படத்தில் உளவுத்துறை அதிகாரியாகவும் கார்த்திகேயன் என்ற புதியவர் இயக்கும் ‘கோடைமழை’ என்ற படத்தில் வெள்ளைத்துரை என்கிற என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாகவும் வேடத்தில் நடித்து வருகிறார் மு.களஞ்சியம். அது சரி நீங்கள் ஹீரோவாக, அஞ்சலி ஹீரோயினாக நடித்த “ஊர் சுற்றி புராணம்” என்ன ஆச்சு? என்று கேட்டால் மனிதர் பொறுமையாக பதில் சொல்கிறார்.

“இந்த பேர் வெச்சதாலோ என்னவோம் அஞ்சலியைத் தேடி ஊர் ஊராக சுத்திக்கிட்டு இருக்கேன். போன வருஷம் 12 நாட்கள் மட்டும் ‘ஊர் சுற்றி புராணம்’ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டார். இது பற்றி எல்லா சங்கங்களுக்கும் என் பிரச்சனைகளையும், பணம் முடங்கிக் கிடக்கிற விஷயங்களையும் விளக்கமாக எழுதி கொடுத்திருக்கிறேன். இன்னும் விடிவுகாலம் தான் வரவில்லை. ஆனால் தெலுங்கு, கன்னடம் என்று அஞ்சலி நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.. ஆனால் என் படத்தை மட்டும் தவிர்க்கிறார்.

இப்போது மீண்டும் தமிழில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறது அப்படி நடிப்பதாக இருந்தால் என் படத்திற்கு கால்ஷீட் கொடுத்து நடித்து விட்டு மற்ற படங்களில் நடிக்கலாம். அப்படியில்லை என்றால் அஞ்சலி நடிக்கிற எந்த படமும் எந்த மொழியிலும் வெளியாக முடியாதபடி நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்க வேண்டியிருக்கும்…எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று ஆதங்கத்துடன் கூறினார் மு.களஞ்சியம்.

 

Abdul KulkarniActor MuraliDirector Kalanjiyamஅதுல்குல்கர்ணிமு.களஞ்சியம்முரளி