பூமணி, பூந்தோட்டம், மிட்டாமிராசு, கருங்காலி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மு.களஞ்சியம். கடந்த பத்து நாட்களுக்கு முன் ஆந்திராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் உடன் வந்த அவரது நண்பர் அருண் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார். களஞ்சியம் உட்பட மற்றவர்கள் காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கினர்.
விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்தவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தபோது, சிகிச்சையளிப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரம் ஒரே ஒரு போன்கால் மருத்துமனை நிர்வாகத்திற்கு வர, உடனே துரித கதியில் களஞ்சியம் மற்றும் அவருடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
அந்த போன்கால் பண்ணியது வேறு யாருமல்ல.. நடிகையும் தற்போது ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வுமான ரோஜா தான். இயக்குனர் களஞ்சியம் விபத்தில் சிக்கிய தகவலை அவர் கேள்விப்பட்டதும் உடனே அவரை காப்பற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால் இன்று தான் உயிருடன் இருப்பதாக உடல் நலம் தேறிவரும் மு.களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
மு.களஞ்சியம் இயக்கிய ‘மிட்டாமிராசு’ படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ரோஜா நடித்திருந்தார். அப்போதிருந்து அவர் மேல் நல்ல மரியாதை வைத்திருந்தார் ரோஜா. இப்போது களஞ்சியம் உயிரை காப்பாற்றி நம் தமிழ்நாட்டு மருமகளாக நமக்கு பெருமை சேர்த்துள்ளார்.