நம்மூரில் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தனகளது படங்களில் தேவைப்படும் இடங்களில் ‘பஞ்ச்’ டயலாக் பேசுவது வாடிக்கை தான்.. ஆனால் இந்த பஞ்ச் வசனங்களின் வழியாகவே ஒரு முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட முடியுமா என்றால் ‘காதல் கசக்குதய்யா’ என்கிற படம் மூலம் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறாராம் இயக்குனர் துவாரக் ராஜா.. பாலாஜி மோகன், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்களின் வரிசையில் குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளார்.
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‘இது ஒரு வாயாடி படம்’. அதுமட்டுமில்லை காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறதாம்.
தான் நடித்த முதல் படத்தில் சாதாரண ஒரு இளைஞனாக ஆரம்பத்தில் தோன்றி, இடைவேளைக்குப்பின் அதிரடியாக கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றி ஆச்சர்யப்பட வைத்தவர் ‘திலகர்’ படத்தில் நடித்த துருவா தான் இந்தப்படத்தின் நாயகன். பிச்சைக்காரன், இறைவி, குற்றமே தண்டனை போன்ற தரமான படங்களை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.