‘காதல் ரீசெட் ரிப்பீட்’ விமர்சனம்

நடிகர்கள் : மதும்கேஷ், ஜியாசங்கர், அர்ஜுன்அசோகன், எம். எஸ். பாஸ்கர்
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
ஒளிப்பதிவு : அரவிந்த்கிருஷ்ணா
இயக்கம் : விஜய்
தயாரிப்பு : டிஸ்டூடியோஸ்&மாலி & மான்விமூவிமேக்கர்ஸ்

விஜய் இயக்கத்தில் அறிமுக நாயகன் மதும்கேஷ், அறிமுக நாயகி ஜியா சங்கர் ஆகியோரது நடிப்பில் உருவாகியிருக்கும் முக்கோண காதல் கதையான ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் எப்படி இருக்கிறது ?, விமர்சனத்தை பார்ப்போம்

நாயகி ஜியா சங்கரை தூரத்தில் இருந்து பார்ப்பதையே தன் வாழ்வின் பாக்கியம் என்ற மனநிலையில் இருக்கும் நாயகன் மதும்கேஷ், அவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஜியா சங்கர், அவரது நண்பர் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையே ஜியா சங்கர் மரதியால் பாதிக்கப்படுகிறார். தூங்கி எழுந்தால் முந்தைய நாளில் நடந்த அனைத்தையும் மறந்து விடும் நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் தான் யார் ? என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தவிக்கும் அவரிடம், காதலனாக அறிமுகமாகி பயணிக்க தொடங்குகிறார் மதும்கேஷ். அவரது இந்த பொய், ஜியா சங்கரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது, என்பதை முக்கோண காதல் கதையாக சொல்வதே ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.

மனதில் காதல் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ஏக்கத்தோடு பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகன் மதும்கேஷ். இறுக்கமான முகம், நடவடிக்கைகளில் பொறுமை என்று தனியாக தெரியும் குணாதிசயங்கள் கொண்ட கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர், அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் பார்வையாளர்களை கவர்ந்து விடுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள காதல் கதை என்பதால் அவருக்கு நடிக்க அதிகமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் அசோகன், தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் விஜி சந்திரசேகர், ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு மற்றும் திரை இருப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

படம் முழுவதும் வெளிநாட்டில் நடப்பதால், அழகான இடங்களை தேடிப்பிடித்து காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். எங்கு கேமரா வைத்தாலும், பசுமையும், பழமையும் நிறைந்த இடங்களாக இருப்பதால் ஒளிப்பதிவாளர் அரவிந்த்கிருஷ்ணா, அத்தனை அழகையும் சிந்தாமல் சிதறாமல் தன் கேமராவில் பதிவு செய்து கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறார்.

ஹரிஷ் ஜெயராஜ் இசையில் பாடல்கள், பின்னணி இசை மற்றும் முக்கியமான பீஜியம்கள் ஏற்கனவே அவரது இசையமைப்பில் வெளியான படங்களின் சாயலோடு பயணித்தாலும், காதல் கதைக்கு உயிரூட்டியிருக்கிறது. படம் முழுவதும் நிரம்பியிருக்கும் காதல் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பார்வையாளர்கள் மனதில் இறக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆண்டனி.

முக்கோண காதல் கதையை புதிய வடிவில் கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் விஜய், அதை பிரமாண்டமான கண்ணோட்டத்தில், அழகு நிறைந்த காட்சிகளோடு ஒரு இசை ஆல்பம் போல் கொடுத்திருக்கிறார்.

அழகான காதல் கதை, அதை சுமந்து செல்லும் கதாபாத்திர தேர்வு, ஸ்காட்லாந்து என்ற அழகு நிறைந்த கதைக்களம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு, திரையில் பிரமாண்டமான காதல் காவியத்தை படைத்திருக்கும் இயக்குநர் விஜய், திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் வந்திருப்பார்கள்.

ரேட்டிங் 3/5

kadhal reset repeat movie reviewkadhal reset repeat reviewகாதல் ரீசெட் ரிப்பீட் திரைப்பட விமர்சனம்காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்