பருவ வயதில் பெண்கள் காதலிப்பது தவறில்லை.. ஆனால் தங்கள் நிலை மறந்து காதலனுடன் ஏகாந்தமாக இருக்க நினைப்பதும் அதற்காக அவர்கள் பாதுகாப்பற்ற இடத்தை தேர்ந்தெடுத்து வீணாக சமூக விரோதிகளுக்கு இறையாவதையும் தவிர்க்கும் பொறுப்பு பெண்களுக்குத்தான் இருக்கிறது என்பதை சொல்லும் படம் தான் இந்த ‘காதல் 2014’..
ஹரீஷும் நேகாவும் இரண்டு நண்பர்களின் வாரிசுகள் என்பதால் சிறு வயதில் இருந்து நெருங்கிப்பழக, பின்னர் அது காதலாக மாறுகிறது. ஒருநாள் காதலனின் விருப்பத்திற்காக தனிமையில் காதல் சரசமாட ஊருக்கு ஒதுக்குப்புறமான கருவேலங்காட்டுக்குள் செல்லும் இந்த ஜோடி, அங்கே எப்போதுமே போதையில் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கும் ‘பாய்ஸ்’ மணிகண்டன் அன் கோவின் பார்வையில் சிக்குகிறது.
பிறகென்ன.. ஹரீஷை தாக்கிவிட்டு அவர் கண் முன்னாலேயே நேகாவை சீரழிக்கின்றனர் அந்த நால்வரும். இந்த விஷயத்தை பெற்றோரிடம் மறைத்து, மனதிற்குள் புழுங்கிக்கொண்டு நடைப்பிணமாக வலம் வருகிறார் நேகா. இதனால் அவரது கனவான ஓட்டப்பந்தய பயிற்சியில் கூட கவனம் சிதறி பின் தங்குகிறார்.
அதற்கேற்றமாதிரி ஆறுதல் சொல்ல வேண்டிய காதலனோ, தான் ஒரு ஆண்பிள்ளையாக இருந்தும் தனது காதலியை காப்பாற்ற முடியவில்லையே என்கிற குற்ற உணர்ச்சியில், குழப்பத்தில் அவளிடம் இருந்து ஒதுங்குகிறான்.. இதனால் வெறுப்படையும் நேகா தன்னை கெடுத்த மனிகண்டனிடமே சென்று காதல் வயப்பட்டு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார்.. இன்னும் ஒரு ‘புதியபாதை’ கதையோ என நினைக்கும் வேளையில் க்ளைமாக்ஸில் சட்டென ரூட் மாறி இன்னொரு புதிய பாதையாக முடிவை சொல்லியிருக்கிறார்கள்.
ஹரீஷிற்கு ஒரு கதாநாயகனுக்கான் மெச்சூரிட்டி இன்னும் வரவில்லை என்றே அவரது நடிப்பை பார்க்கும்போது தோன்றுகிறது. ஆனால் நேகா அதில் பாஸ்மார்க் வாங்கி விடுகிறார்.. நேகா என பெயர் வைத்ததாலோ என்னவோ தோற்றத்தில் கிட்டத்தட்ட சிநேகாவை ஞாபகப்படுத்துகிறார்.
நேகாவின் தாய்மாமனாக வரும் காமெடியன் அப்புக்குட்டி அளவு சாப்பாடாக இருந்திருந்தால் ரசித்திருக்கமுடியுமோ என்னவோ.. அன்லிமிடெட் சாப்பாடாக இருப்பதால் திகட்டி விடுகிறார். வில்லநாக, சமூக விரோதி கேரக்டரில் ‘பாய்ஸ்’ மணிகண்டன் அற்புதமாக பொருந்துகிறார்.
இன்று பேப்பர்களில் அடிக்கடி நாம் படிக்கின்ற, காதல் என்கிற பெயரில் தனிமையை நாடி சமூக விரோதிகளிடம் சிக்கும் இளம்பெண்களின் அவல நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அவளது காதலனோ அல்லது கணவனோ ஆதரவாக இருக்கவேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தும் விதமாகவும் கதை சொல்லியிருக்கும் இயக்குனர் சுகந்தனை பாராட்டலாம்.