“ஹே செல்வா.. என்னப்பா இது தாடியெல்லாம் வச்சு..?” ; திகைக்க வைத்த ரஜினி..!

இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா இயக்கி நடித்துள்ள படம் ‘12.12.1950’ டைட்டிலே அதுதாங்க… டைரக்டரின் பெயர், படத்தின் டைட்டில் தேதியை பார்த்ததும் அட இது சூப்பர்ஸ்டார் பிறந்த நாளாச்சே என பிளாஷ் அடிக்கிறதா..? அதே தான்.. என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமே தான்.

யார் இந்த கபாலி செல்வா என்றெல்லாம் ரொம்ப குழப்பிக்கொள்ள வேண்டாம்.. நாட்டுப்புற பாட்டு, சக்திவேல் உட்பட பல படங்களில் நடித்தவர், இதுதாண்டா போலீஸ் ராஜசேகரின் தம்பி, இன்னும் சொல்லப்போனால் முகமூடி படத்தில் கராத்தே மாஸ்டராக இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான். ரஜினி மீது கொண்ட தீவிர பற்று காரணமாக தனது பெயரையே கபாலி செல்வா என மாற்றிக்கொண்டு, இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படம் டிச-8ஆம் தேதி வெளியாக இருப்பது குறித்தும், இந்தப்படத்தை உருவாக்கியது குறித்தும் பத்திரிகையாளர்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் கபாலி செல்வா. குறிப்பாக கபாலி ரஜினி கெட்டப்பிலேயே நரைத்த தாடி மீசையுடன் காட்சியளித்து நம்மை ஆச்சர்யப்பட வைத்தார் செல்வா.

அவர் பேசும்போது, “நான் நடிக்க வந்த புதிதில் தலைவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து அவரது பிறந்தநாளில் பலமுறை அவரை சந்தித்து வாழ்த்து பெற்று வந்துள்ளேன். இந்தப்படம் இயக்குவது குறித்து ரஜினியிடம் தகவல் தெரிவிக்க சென்றேன்… என்னை பார்த்ததும் “ஹே செல்வா என்னப்பா இது தாடியெல்லாம்..? பார்க்க ஆளே வித்தியாசமா இருக்கேப்பா” என ஆச்சர்யப்பட்டார் தலைவர்.. அவர் இருக்கும் உயரத்திற்கு, எத்தனை நாள் கழித்தும் கூட அவரை சந்திக்கப்போகும்போது நம்மை ஞாபகம் வைத்து பேசுகிறாரே, அதனால் தான் அவர் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார்” என ரஜினி புகழ் பாடினர் கபாலி செல்வா.

ரஜினிக்கு நேரம் கிடைத்தால், இந்தப்படத்தை பார்க்க விரும்பினால் நிச்சயம் அவருக்கு திரையிட்டு காட்டுவேன் என்றும் கூறினார் செல்வா. இந்தப்படத்தில் தம்பி ராமையா டிஜிபி வேடத்தில் அதேசமயம் கமல் ரசிகராக நடித்துள்ளார். படத்தில் ஒன்பது விதமான கமலின் கெட்டப்பில் வருகிறாராம் தம்பி ராமையா. எம்.எஸ்.பாஸ்கரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மற்றும் யோகிபாபு, ராஜ்திலக், ஆதவன் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.

12.12.1950Kabali Selvaஆதவன்எம்.எஸ்.பாஸ்கர்கபாலி செல்வாதம்பி ராமையாயோகிபாபுராஜ்திலக்