மற்ற எந்த நடிகர்களின் ரசிகர்களுக்கும் இல்லாமல் ரஜினி ரசிகர்களாக இருப்பவர்களுக்கு மட்டும் ஒரு ஃபீவர் வரும்.. அதுவும் ரஜினி படங்கள் ரிலீசாகும் நேரத்தில் மட்டுமே வரும்.. இது படிக்கும் மாணவர்கள், வேலைக்கு போகும் நபர்கள் என பாரபட்சமில்லாமல் வரக்கூடியது.. இதோ இன்னும் நான்கு நாட்களில் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ ரிலீஸாகவுள்ள நிலையில் கபாலி ஃபீவர் ரசிகர்களை பிடித்துக்கொண்டுள்ளது..
ஒரு சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ‘கபாலி’ ரிலீஸை முன்னிட்டு விடுமுறை அளித்துவிட்டன. எதற்கு வம்பு.. லீவு கொடுக்காவிட்டாலும் அன்றைய தினம் வேலைக்கு வரமாட்டார்கள்.. அதற்கு நாமே லீவு கொடுத்துவிட்டால் சந்தோஷத்தில் அடுத்த நாள் முதல் வேலை இன்னும் சுறுசுறுப்பாக ஓடும்.. நல்ல பெயரும் கிடைக்கும் என்பதுதான் காரணம்.. இன்னும் சிலர் டிக்கெட்டுகளையே வாங்கி ஊழியர்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்களாம்.
சமூக வலைதளங்களில் முக்கியமாக ஓடிக்கொண்டு இருப்பது கபாலி லீவ் லெட்டர்கள் தான்.. ஆளாளுக்கு விதவிதமாக லீவ் லெட்டர்களை எழுதி தள்ளுகிறார்கள்.. அதில் ஒருத்தர், “ஐயா.. நான் கபாலி ஃபீவரால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. கபாலி படம் பார்த்தால் தான் இது சரியாகும்.. ஆகவே எனக்கு வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என லீவு கேட்க இருக்கிறாராம்.
இன்னொருத்தரோ, “கபாலிக்கு லீவு கொடுங்க.. இல்லைனா செஞ்சுருவேன்’ என ‘மாறி’ தனுஷ் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு அதிரவைக்கிறார். இந்த ஃபீவரை அதிகப்படுத்தும் விதமாக இன்றுமுதல் கபாலி படத்துக்கான முன்பதிவு களைகட்ட துவங்கிவிட்டது.. முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் புக்கிங் திறந்த சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டனவாம்.