காவியத்தலைவன் – விமர்சனம்

சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலகட்டத்தில் வாழ்ந்த, நாடகத்திற்காகவே தங்களை அர்ப்பணித்த இரண்டு நாடக நடிகர்களின் வாழ்க்கை தான் காவியத்தலைவன்’.

நாசர் நடத்திவரும் நாடக கம்பெனியில் சிறுவயது முதற்கொண்டு நாடகமே உயிர்மூச்சாக வாழும் இளைஞர்கள் பிருத்விராஜும் சித்தார்த்தும்.. பிருத்விராஜ் நாடகங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுபவர். ஆனால் சித்தார்த்தோ இன்னும் ஒரு படி மேலாக கதாபத்திரங்களை தனது நடிப்பால் சற்று வித்தியாசமாக மெருகேற்றுபவர்..

இதனால் ராஜபார்ட்டாக சித்தார்த்திற்கு முக்கியத்துவம் கிடைக்க, மனம் வெதும்புகிறார் பிருத்விராஜ். இந்நிலையில் நாடக சபாவில் தஞ்சமடைந்த வேதிகாவை பிருத்விராஜ் விரும்ப, அவரோ சித்தார்த்தை விரும்புகிறார். ஆனால் நாடகம் பார்க்க வரும் ஜமீன்தாரின் மகளுடன் காதல் வயப்படுகிறார் சித்தார்த்..

சித்தார்த்தின் காதலை அறிந்த பிருத்விராஜ் அதுபற்றி நாசரிடம் போட்டுக்கொடுக்க, சித்தார்த்திற்கு தண்டனையாக அந்த பெண்ணை மறந்துவிடவேண்டும் எனவும் இனி நாடகங்களில் நடிக்க கூடாது எனவும் சத்தியம் வாங்கி, ஊரைவிட்டு தனது குழுவினருடன் ஊரைவிட்டு கிளம்புகிறார் நாசர்.

சில நாட்களில் அந்தப்பெண், சித்தார்த்தின் கருவை தாங்கிய நிலையில் தற்கொலை செய்துகொண்ட செய்திவர, ஆக்ரோஷமாகும் சித்தார்த் கோபத்தில் குருவிற்கே சாபம் விடுகிறார். நாசர் மனமொடிந்து உயிரைவிட இப்போது கம்பெனி பிருத்விராஜ் கைவசம் வருகிறது.. ஆனால் சித்தார்த்தை வெளியேற்றிவிட்டு மற்றவர்களுடன் கம்பெனியை நடத்துகிறார் பிருத்விராஜ். காலச்சக்கரம் சுழன்றாலும் அது சித்தார்த்துடனான பிருத்விராஜின் வன்மத்தை குறைத்ததா, வேதிகாவை யாருடன் சேர்த்தது என்பதுதான் இடைவேளைக்குப்பின்னான கதை.

1930களில் நாடகக்கலை எப்படி இருந்தது, நாடக நடிகர்களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என அலசி ஆராய்ந்து அதற்கு திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.. பிருத்விராஜும் சித்தார்த்தும் தங்களது நடிப்பால் நாடக கலைக்கு உயிரூட்ட முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்..

திறமையிருந்தும் ஓரு நாடக கலைஞன் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது அவன் மனதில் துவேஷம் எப்படி கருவேல விருட்சமாய் படர்ந்து அவனது குணத்தையே மாற்றுகிறது என்பதை பிருத்விராஜின் கதாபாத்திரம் சரியாக பிரதிபலிக்கிறது. க்ளைமாக்ஸில் அவரது ஆழ் மன வன்மம் வெடித்துக்கிளம்பும் இடம் ஒரு கலைஞனுக்கு புகழும் அங்கீகாரமும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும்போது நிஜத்தால் சுடுகிறது.

நாடகம் மட்டுமே வாழ்க்கை, அதில் விரோதங்களுக்கு இடமில்லை என அனைவரிடமும் அன்பு பாராட்டுகின்ற, நண்பனின் துரோகத்தால் மனதில் விழுந்த கீறலுக்கு கூட பாச முலாம் பூசுகின்ற மென் மனதுக்காரராக சித்தார்த்தின் கதாபாத்திரமும் வெகு நேர்த்தி.

மனதில் காதலனாக வரித்தவனையே மணக்கவேண்டும் என்பதால் நேர்மையான பிருத்விராஜின் காதலை புறக்கணித்தாலும், சித்தார்த்தின் மீது தான் கொண்ட காதலுக்கு நேர்மையாக இருக்கும் வேதிகாவின் கதாபாத்திரம் மீது ஒரு பக்கம் கோபமும் அதேசமயம் மரியாதையும் ஏற்படவே செய்கிறது..

கொஞ்ச நேரமே வந்தாலும் ஜமீன்தாரின் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனைகா சோட்டியின் சிரிப்பும் துறுதுறுப்பும் மனதை அள்ளுகிறது. நாடக குருவான நாசரின் மிடுக்கான, கோபமான நடிப்பு, ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணனின் அலட்டல், மொத்த குழுவையும் வழி நடுத்தும் வாத்தியாராக தம்பிராமையா, அவ்வபோது சிரிக்கவைக்கும் சிங்கம்புலி, நாடகக்கலையை வியாபாரமாகவே மட்டும் பார்க்கும் மன்சூர் அலிகான் உட்பட அனைவரின் தேர்வும் அருமை தான்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை நம் மனதில் பதிய வைத்திருப்பதில் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும் ஆர்ட் டைரக்டரும் உழைப்பை கொட்டியிருப்பது பிரேம் பை பிரேம் தெரிகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை தான் படத்தை சீராக நகர வைக்கும் அச்சாணியே.. அதிலும் ‘யாருமில்லா’ பாடலில் ஆரம்பகால இசைப்புயல் ஒருகணம் வந்துபோகிறார்.

கமர்ஷியல் சினிமாக்களுக்கு மத்தியில் நாடக நடிகர்களின் வாழ்க்கையை படமாக்க ஆத்மார்த்தமாக முயற்சி செய்திருக்கும் வசந்தபாலன் பாராட்டுக்குரியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைதான். ஆனால் இடைவேளைவரை விறுவிறுப்பாக செல்லும் கதை இடைவேளைக்குப்பின் கடைசி அரைமணி நேரம் திசைமாறிவிடுவது படத்தின் வேகத்திற்கு தடைபோடுகிறது..

சித்தார்த்தின் முடிவு நெகிழவைக்கும் அதே நேரத்தில், படத்தின் துவக்கத்தில் இந்த கதையை சொல்ல ஆரம்பிக்கும் பிருத்விராஜின் முடிவு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. பாகவதர், எம்.ஜி.ஆர் காலங்களில் வெளியான படங்களை பார்த்திராதவர்களுக்கு காவியத்தலைவன் புது அனுபவம் தருபவனாகவே இருப்பான்.

அனைகாகாவியத்தலைவன் – விமர்சனம்சிங்கம்புலிசித்தார்த்தம்பிராமையாநாசர்பிருத்விராஜ்பொன்வண்ணன்வசந்தபாலன்வேதிகா