‘காளி’ படத்தின் 2௦ நிமிட காட்சிகளை ‘தில்’லாக திரையிட்ட விஜய் ஆண்டனி..!


விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.

“தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.

நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. கிருத்திகா அவர்களை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு” என்றார் ஆர் கே சுரேஷ்.

“இந்த மேடையில் பேசும்போது ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்” என்றார் நாயகி சுனைனா.

பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

கல்லூரியில் படித்த நாட்களில் கிருத்திகா என்னுடைய ஜூனியர், அன்றும் இன்றும் மிகவும் எளிமையானவர். எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம். நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை பாடலாசிரியர் அருண்பாரதி நிரப்பி வருகிறார். திமிரு பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன்” என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.

AmrithaFATIMA VIJAY ANTONYKaaliKruthiga UdaySunaninaVijay Antonyகாளிவிஜய் ஆண்டனி