‘மனோகரா’ படத்தில் நடிகர் திலகம் சிவாஜியை பார்த்து ‘கண்ணாம்பா பேசிய அதிரடி வசனம் தான், “மனோகரா. பொறுத்தது போதும் பொங்கி எழு..” என்பது. இப்போது இதையே ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி.
படத்தை ஆரம்பிக்க முடிவு செய்ததும் முதலில் இவர் ஷூட் பண்ணியது க்ளைமாக்ஸ் காட்சியைத்தான். காரணம் படம் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை நான்ஸ்டாப் காமெடியாக சென்று இறுதியில் சற்று மனதை கனக்க வைக்குமாறு இருக்குமாம்.
அதனால் ஆரம்பத்தில் காமெடி காட்சிகளை எடுத்துவிட்டால் அடுத்து க்ளைமாக்ஸ் காட்சியில் எதிர்பார்த்த சோகத்தை திரையில் முழுதாக கொண்டுவர முடியாது என்பதால் யாருக்குமே கதையை சொல்லாமல் முதலில் சோகத்தை படமாக்கிவிட்டு அடுத்து காமெடி கட்சிகளுக்கு நகர்ந்தார்களாம்.
இர்பான் கதாநாயகனாக நடிக்க, படம் முழுவதும் அவருக்கு காமெடி தோழனாக நடித்திருக்கிறார் சிங்கம்புலி. இதில் இர்பான் பால்காரனாக நடித்திருக்கிறார். ‘அண்ணாமலை’ படத்திற்கு பிறகு பால்காரர்களின் பெருமைபேசும் படமாக இது உருவாகியிருக்கிறதாம். படத்தில் இவருக்கு ஜோடியாக அர்ச்சனா, அருந்ததி நாயர் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்..
வரும் டிசம்பர் மாதம் தயாரிப்பாளர் பரந்தாமனே சொந்தமாக ரிலீஸ் செய்கிறார். 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாம். க்ளைமாக்ஸ் காட்சி மனதை நெகிழவைத்து தான் ரசிகர்களை வெளியே அனுப்புமாம். இது இயக்குனரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.