வியாபாரம், லாபம் என்பதை ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வாங்கி வெளியிட்டு வருபவர் தான் இயக்குனர் லிங்குசாமி. அப்படித்தான் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கிய ‘இனம்’ படத்தையும் வாங்கி கடந்த வெள்ளியன்று வெளியிட்டார் லிங்குசாமி.
இந்தப்படம் இலங்கையில் நடந்த தமிழர்களின் ஜீவ மரண போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த்து. ஆனால் படம் குறித்து சர்ச்சை கிளம்பவே தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கும் பல தமிழ் ஆர்வலர்களுக்கும் இந்தப்படத்தை போட்டுக்காட்டினார் லிங்குசாமி. அதன்பின் அவர்கள் ஆலோசனையின் பேரில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட ஐந்து காட்சிகளை படத்திலிருந்து தூக்கச் செய்தார்.
ஆனாலும் சர்ச்சைகள் முடிந்தபாடில்லை.. லிங்குசாமியின் மீது அவர் தமிழர்களுக்கு எதிரானவர் என்பதுபோல சிலர் கருத்து தாக்குதல்களை நடத்தவும் வதந்திகளை பரப்பவும் ஆரம்பித்தனர். இதனால் மனம் நொந்த லிங்குசாமி இன்றுமுதல் அனைத்து தியேட்டர்களில் இருந்தும் ‘இனம்’ படத்தை வாபஸ் பெறச்சொல்லி விட்டார்.
“அடிப்படையில் சினிமாவின் தீவிர காதலனாக, லாப நஷ்டங்களையும் தாண்டி நல்ல படைப்புகளை முன்னெடுப்பதை பெருவிருப்பமாக செய்து வருகிறேன். அதேபோலத்தான் ‘இனம்’ படத்தையும் வாங்கி வெளியிட்டேன். ஆனால் சில தவறான புரிதல்களினால் பலரின் மனம் புண்பட்டிருப்பதாக அறிந்தேன். அரசியல் ரீதியாக குழப்பங்களும் விளைவிக்கப்படுகின்றன. தற்போது தமிழ் மண்ணின் மீதான எனது அன்பை கேள்விக்குள்ளாக்குவது மாதிரியான வதந்திகளையும் சிலர் பரப்பி வருகிறார்கள். தேர்தல் நேரத்தில் தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம் என்பதால் இன்றுமுதல் அனைத்து தியேட்டர்களில் இருந்தும் ‘இனம்’ படத்தை வாபஸ் பெறுகிறேன்” என கனத்த மனதுடன் உருக்கமாக கூறியுள்ளார் லிங்குசாமி.