என்றைக்கு இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கமலை வைத்து ‘உத்தம வில்லன்’ படத்திற்கான பூஜை போட்டதோ அப்போதிருந்தே இந்த காம்பினஷனுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. கமலின் நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதால் இதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்கிற எண்ணம் இன்னும் வலுப்பெற்றுள்ளது.
இன்று இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதில் பல்வேறு மாறுபட்ட கெட்டப்புகளில் கமல் நடித்திருப்பதை பார்க்கும்போது நம்மால் பிரமிக்காமல் இருக்கமுடியவில்லை. அதில் தன்னை நோக்கி கேள்வி கேட்கும் பார்வதியிடம் “நான் வில்லன் தான்” என கமல் சொல்வது இப்போதே சஸ்பென்ஸிற்கு வித்திட்டுள்ளது. இந்தப்படத்தை ஈராஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக வெளியிட உள்ளது.
ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், நாசர், ஊர்வசி என நட்சத்திர பட்டாளத்துடன் மறைந்த இயக்குனர் சிகரமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலின் இன்னொரு ஆஸ்தான இயக்குனரான கே.விஸ்வநாத்தும் இதில் பங்கு பெற்றிருக்கிறார். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது நாடகம் மற்றும் சினிமாவின் பின்புலத்தில் இதன் கதை பின்னப்பட்டுள்ளதாகத்தான் தோன்றுகிறது.