மேடைகளில் மெல்லிசை கச்சேரி நடத்தும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து மெல்லிசை குழுக்களையும் கடந்த ஜூன்-30ஆம் தேதி, சென்னை தி.நகரில் ஒன்று கூட்டினார் இசைஞானி இளையராஜா.. காரணம் கொஞ்சம் சீரியஸ் ஆனதுதான். அதாவது, இனி மெல்லிசை குழுக்கள் அவரது பாடல்களை மேடையில் பாடுவதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை அவரிடமே செலுத்தவேண்டும் என்பதை அறிவிப்பதற்காகத்தான் இந்த கூட்டம். உடனே இசைஞானி, பணத்தாசை பிடித்து அலைகிறாரா என அவரை தவறாக நினைத்துவிட வேண்டாம். அதற்கான காரணத்தை அவரே சொல்கிறார்.
“என்னுடைய பாடல்களையோ, மற்றவர்கள் பாடல்களையோ நீங்கள் பாடும்போது சட்டப்படி அதற்கு அனுமதி பெறவேண்டும் என்பது நடைமுறை.
இதை உங்களிடம் இருந்து பெறுவதற்காக இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் இணைந்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் ஐ.பி.ஆர்.எஸ். ஆனால் அந்த ஐ.பி.ஆர்.எஸ் நிர்வாகம் தவறான கணக்குகளைக் காட்டி அந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள என் போன்றவர்களை ஏமாற்றி வருகிறது. என் பாடல்களுக்காக அவர்கள் வசூலிப்பதில் பத்து சதவீதம் கூட எனக்கு வந்து சேர்வதில்லை. எந்த இசை அமைப்பாளருக்கும் நியாயமாய் சேர வேண்டியவை சென்று சேர்வதில்லை” என இதுவரை நடைபெற்ற தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியுள்ளார் இளையராஜா.
அதனால், அந்த நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மேல் நம்பிக்கை இல்லாததால் அந்த அமைப்பிலிருந்து விலகிக்கொள்ள முடிவு செய்து விட்டார் இளையராஜா. “எவனோ ஒருவன் என் பெயரை சொல்லி பணம் வசூலித்து உங்களையும் என்னையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். அதனால் உங்களிடமே நேரடியாக இதை சொல்லி என் பாடல்களுக்கான தொகையை என் அலுவலகத்தில் நேரடியாக செலுத்த சொல்லலாம் என யோசித்து உங்களை அழைத்தேன். அதேபோல் இவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்று நான் உங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சேர்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன் நான் கேட்பவன் அல்ல கொடுப்பவன்” என உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் இதற்கு இன்னொரு மாற்று வழி ஒன்றையும் இளையராஜாவே கூறியுள்ளார். “ஒரு நிகழ்ச்சியில் எத்தனை பாடல்கள் பாடுகிறீர்கள் அதற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்று நீங்களும் சினி மியூசிக் யூனியனுடன் அமர்ந்து பேசியும் முடிவெடுக்கலாம். ஐ.பி.ஆர்.எஸ் மூலம் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த கூட்டத்தின் மூலம் இந்த பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்வோம். இல்லாவிட்டால் நாமே ஒரு புதிய அமைப்பை உருவாக்கிக் கொள்ளலாம். இப்போதே கூட ஒரு கமிட்டியை போடுங்கள். நாம் ஏன் மற்றவர்களிடம் ஏமாற வேண்டும்” எனவும் ஆலோசனை கொடுத்துள்ளார் இளையராஜா.