ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் பாராட்டிய கொடைக்கானல் ஓண்ட் (Kodaikanal Wont’) வீடியோவை பார்த்திருப்பவர்களில் நீங்களும் ஒருவராக கூட இருக்கலாம். இதுவரை சுமார் 40 லட்சம் பேர் கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இணையத்தில் பார்த்துள்ளனர். இந்த கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் விடியோவை இயக்கியவர் ரதிந்தரன் ஆர் பிரசாத்..
இவர் இயக்கிய ‘ஸ்வேயர் கார்ப்பொரேஷன்’ (Swayer corporation) என்கிற 30 நிமிட குறும்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்ற முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். இதில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அஷ்வின் மற்றும் ஆரண்ய காண்டம், ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்துள்ள குரு சோமசுந்தரம் இணைந்து நடிக்க உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்( Greg Burridge) இப்படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்க உள்ளார். இத்தாலியை சேர்ந்த ராபெர்டோ ஜாஜெர் (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார்.
இப்படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார்.