தமிழ்சினிமாவை பொறுத்தவரை அதன் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க தயாரிப்பலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ‘பைரசி’ பிரச்சனைதான். கோடிகளை கொட்டி எடுக்கப்பட்டு இருக்கும் படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இணையதளத்தில் வெளியாகி தயாரிப்பளருக்கு சென்று சேரவேண்டிய பெரும் தொகையை நட்டப்படுத்தி விடுகிறது..
அந்தவகையில் பிப்-9ஆம் தேதி சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகி வெளியாக இருக்கும் ‘சி-3’ படத்தை அன்றைய தினம் 11 மணிக்கே ஆன்லைனில் லைவாக வெளியிடுவதாக கொக்கரித்துள்ளது தமிழ்ராக்கர்ஸ் என்கிற திருட்டு இணையதளம்.. இந்த இணையதளத்தை நடத்துபவர்களுக்கு படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்..
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ஹரி, ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.. அதில் அவர் கூறியுள்ளதாவது, “நம்முடைய இளைஞர்கள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம். எழுச்சியோடு, ஒரு மாபெரும் புரட்சி செய்து அதை நிரூபித்தீர்கள். உலகத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை பாராட்டாத ஆளே கிடையாது.
திருட்டு டி.வி.டி-யிலோ, சட்டவிரோதமான இணையதளங்களிலோ படம் பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம். நீங்களே அதை சரியாக உணர்ந்து விட்டால் அதைச் செய்வது உங்களுக்கு பிடிக்காது. அனைத்து இளைஞர்களுமே பார்ப்பதாக, நான் குற்றம் சொல்லவில்லை, ஏதோ ஒரு சாரார் மட்டுமே அப்படி பார்க்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டும்.
சினிமா என்பது ஒரு தொழில் மட்டுமல்ல ஒரு கலை. தயாரிப்பாளர் கூட ஒரு கலைஞன் தான். சினிமாவின் வரலாற்றில் எத்தனை பேர் சம்பாதித்தார்கள் எத்தனை பேர் விட்டுச் சென்றார்கள் என்று பார்த்தால், விட்டுச் சென்றவர்கள் தான் அதிகம். அதனால் தயாரிப்பாளருக்கு பணம் போய் சேர வேண்டும் என்றால், கண்டிப்பாக தியேட்டரில் படம் பார்த்தால் மட்டுமே போய் சேரும்.
ஒரு படத்தை மொத்தமாகவோ காட்சிகளாகவோ விமர்சனம் செய்கின்ற உரிமை பார்வையாளர்களுக்கு உண்டு. ஆனால் அதை தியேட்டரில் படம் பார்த்துவிட்டு செய்யுங்கள். தவறான வழியில் அல்ல. யாராவது தவறு செய்தால், அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.” என உருக்கமாக கூறியுள்ளார் ஹரி..
அதேசமயம் இப்படி புதுப்படங்களை ஆன்லைனில் வெளியிட்டு அட்டகாசம் பண்ணும் கும்பலுக்கும் தார்மீக முறையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் ஹரி.. அதுபற்றி ஹரி கூறும்போது, “இணையதளம் பற்றி எனக்கு முழுதாக தெரியாது. ஆனால், அந்த இணையதளம் சம்மந்தப்பட்டவர்களுக்கு, நான் வைக்கின்ற வேண்டுகோள் என்னவென்றால், உங்களுக்கு யார் மீது கோபம்? எதற்காக ஒரு படத்தை இப்படி செய்கிறீர்கள். அதனால் உங்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒன்றும் இல்லை.
நீங்கள் ஒரு நாள் உட்கார்ந்து ஒரு பத்து நிமிடம் யோசித்து பாருங்கள். நாம் செய்வது சரியா தவறா என்று. ஐயோ இந்த பாவத்தை எதற்கு செய்கிறோம் என்று கண்டிப்பாக தோன்றும். ஒரு தயாரிப்பாளர் மூலமாக, முன்னூறு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஆயிரம் பேர் பயனடைகிறார்கள். அந்த தயாரிப்பாளரை நசுக்கி விட்டால், அவர் அடுத்து படம் தயாரிக்கவே மாட்டார். சினிமா துறையே நசித்து விடும்.
ஒரு தொழில் துறையை நசுக்கி விட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்? சினிமா ஒரு தொழில். அரசியல் அல்ல. இந்த தொழிலில் உங்கள் அனைவரையும் சந்தோஷப் படுத்துவதற்காக நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். யாருமே நூறு சதவிகிதம் ஜெயிப்பதும் இல்லை. நூறு சதவிகிதம் சம்பாதிப்பதும் இல்லை. அதனால் இப்படி ஒரு சூழலில், பெரிய ஆபத்தில் நாங்கள் இருக்கும் போது, எங்களை நீங்கள் ஏன் கஷ்டப்படுத்துகிறீர்கள்?
தயவு செய்து எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள். இனிமேல் இந்த வேலையை செய்ய மாட்டோம் என்று உங்கள் டிவிட்ட்ரில் பதிவு செய்யுங்கள். உலகமே உங்களை கைதட்டிப் பாராட்டும். தயவு செய்து எங்களை அழிக்காதீர்கள்.
எங்களுடைய படம் தவறான வழியில் பார்க்கப்பட்டால், நாங்கள் எவ்வளவு வேதனை படுவோம் என்று எண்ணிப்பாருங்கள். எல்லோரும் மனிதர்கள் தான். எல்லோருக்குமே காயம்பட்டால் சிவப்பு இரத்தம் தான். உங்களுக்கு பச்சை இரத்தம் வருமென்று சொன்னால் இந்த தவறை செய்யுங்கள்.
உலகமே நம் தமிழ் சமூகத்தை திரும்பிப்பார்த்து வியக்கும் அளவிற்கு, நாம் ஏற்கனவே ஒரு புரட்சியை உருவாக்கி இருக்கிறோம். இதே மாதிரியான உயர்வுடனேயே நாம் இருக்க வேண்டும். யாரும் நம்மை பார்த்து கேவலமாக பேசும் நிலைக்கு தள்ளப்பட்டு விடக்கூடாது” என அதில் கூறியுள்ளார் ஹரி.