இன்று 63வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். இதில் 56 வருடமாக சினிமாவை சுவாசித்தே வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆனால் இத்தனை வயது என்றாலும் இன்றைய இளம் முன்னணி நடிகர்களுக்கு சவால் விடும் வகையில், கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் காட்டிவரும் வேகம் பிரமிக்க வைக்கிறது.
கமல் படைத்த சாதனைகள், வாங்கி குவித்த விருதுகள், சூட்டப்பட்ட பட்டங்கள், ஒவ்வொரு துறையிலும் அவருக்குண்டான ஆளுமை என பட்டியலிட்டால் இரண்டு புத்தகம் போடவேண்டிவரும்.. இன்று பிறந்தநாள் காணும் நம் உலக நாயகனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
கமல் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடன் குழந்தை நட்சத்திரமாக ‘ஆனந்த ஜோதி’ என்கிற ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளார்
மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் ‘இதி கதா காது’ என்கிற ஒரே படத்தில் மட்டும் இணைந்து நடித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் அமிதாப், ரஜினி இருவருடனும் இணைந்து ‘கிராப்தார்’ என்கிற இந்திப்படத்தில் நடித்த பெருமை கமலுக்கு மட்டுமே உண்டு.
தமிழில் மிக முக்கியமான நடிகரான, குறிப்பாக ரஜினியின் ஆஸ்தான நடிகரான ராதாரவியுடன் இவர் இணைந்து நடித்தது ஒரே படத்தில் தான்.. படத்தின் பெயர் ‘உயர்ந்த உள்ளம்’
ஏனோ தெரியவில்லை.. அனைத்து ஹீரோக்களும் விரும்பி நடித்த, மறைந்த நடிகர் ரகுவரனும் இவரும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்க முடியாமலேயே போய்விட்டது..
அதேபோலத்தான் நகைச்சுவை நடிகர் விவேக்கும் இவரும் இணைந்து நடித்ததில்லை.
எண்பதுகளில் கோலோச்சிய நடிகைகளில் நதியாவுக்கும் கூட கமலுடன் ஜோடியாக நடிக்கும் பாக்கியம் கிடைக்காமலேயே போய்விட்டது.
இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 28 படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்