ஒரு சில நட்சத்திரங்கள் சினிமாவில் கோலோச்சிவிட்டு பின் சினிமாவை விட்டு விலகி இல்லற வாழ்க்கையில் ஒதுங்கிக்கொண்டாலும் சினிமாவில் அவர்களது இடம் மட்டும் யாராலும் நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கும். அப்படித்தான் ஜோதிகாவின் இடமும் இன்றுவரை அவருக்கானதாகவே அப்படியே இருக்கிறது.
அவர் மீண்டும் நடிக்க வரமாட்டாரா என்கிற ஏக்கம் ரசிகர்களுக்கு இருக்கவே செய்தது.. காரணம் நொடிக்கு நூறு முக பாவனை காட்டி, தனது நடிப்பால் ரசிகர்களை வசியும் செய்யும் சக்தி ஜோதிகாவுக்கு மட்டும் எளிதாக கைவந்தது. இன்று வரும் அறிமுக நடிகைகள் பலரும் தங்களுக்கு ரோல்மாடல் என குறிப்பிடும் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவரும் ஜோதிகா தான்.
முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சூர்யாவை காதல் மணம் புரிந்து இல்லத்தரசியாக மாறி தனது குடும்பத்தை கவனித்துவரும் ஜோதிகா, இன்றைய காலகட்டத்தில் திரையுலகிலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் என்றால் அது நூறு சதவீதம் கலப்படம் இல்லாத உண்மை..
தற்போது தனது நடிப்புக்கு தீனிபோடும் நல்ல கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். அந்தவகையில் ’36 வயதினிலே’ படம் மூலம் திரையுலகில் வெற்றிகரமாக மறுபிரவேசம் செய்தார் ஜோதிகா. குடும்பத்துக்காகவே உழைத்து ஓடாக தேயும் சாதாரண நடுத்தர வர்க்கத்து பெண்மணியின் மன உணர்வுகளை அப்படியே பிரதிபலித்ததில் ஜோதிகாவின் மீதான மதிப்பு இல்லத்தரசிகளிடம் இன்னும் கூடிப்போனது..
அதனாலேயே தற்போது அவர் நடித்துவரும் ‘மகளிர் மட்டும்’ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. நிச்சயம் அந்தப்படமும் வெற்றிப்பட்டியலில் இடம்பிடிக்கும் என்பது உறுதி. இன்று பிறந்தநாள் காணும் ஜோதிகாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.