சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி – அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்

சென்னையில் நடைபெற்ற முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி – அபிஷேக்.டி சாம்பியன் பட்டம் வென்றார்

தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் சார்பில், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ் பவுல் மையத்தில் முதல் தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டி நடத்தப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் அபிஷேக் டி மற்றும் ஆனந்த் ராகவ் மோதினர்.

மூன்று ஆட்டங்களில் சிறந்த இரண்டு ஆட்டங்கள் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அபிஷேக் டி முதல் ஆட்டத்தை 191-185 என்ற கணக்கிலும், இரண்டாவது ஆட்டத்தை 189-135 என்ற கணக்கிலும் வென்று 2-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

அரையிறுதிச் சுற்றில் அபிஷேக் டி, விஷ்ணு எம்-மை 214-166, 196-194 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் ஆனந்த் ராகவ், அக்ரமுல்லா பெய்கை 215-161, 196-161 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றை எட்டினார்.

போட்டியின் இரண்டாவது சுற்று முடிவில் ஷப்பீர் தங்கோட் 2,286 பின்களை வீழ்த்தி 190.5 சராசரியுடன் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன. 6 ஆட்டங்கள் கொண்ட தொகுப்பில் 190.8 சராசரியை பதிவு செய்த ஷப்பீர் தங்கோட், அதிகபட்ச சராசரிக்கான விருதைப் பெற்றார். ஒரே ஆட்டத்தில் 233 புள்ளிகள் குவித்த தீபக் கோத்தாரி, அதிகபட்ச புள்ளிகள் பெற்ற வீரராக கவுரவிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டில் டென்பின் பவுலிங் விளையாட்டின் வளர்ச்சிக்கும், புதிய வீரர்களை உருவாக்கும் முயற்சிக்கும் இந்த மாநில தரவரிசைப் போட்டி முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.