டாக்டர் டூமுக்கு எதிராக ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிரம்மாண்ட மோதலுக்கு தயாராகுங்கள்!
அமெரிக்க வெளியீட்டுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது, டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம்.
மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லரை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்பதிவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் புதிய டிரெய்லர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முன்னணி சூப்பர் ஹீரோக்கள் பலரும் ஒரே திரையில் ஒன்றிணைந்து, இதுவரை எதிர்கொள்ளாத மிகப்பெரிய அச்சுறுத்தலைச் சந்திக்கத் தயாராகும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மார்வெல் உலகின் மிக வலிமையான வில்லனாகக் கருதப்படும் டாக்டர் டூமை எதிர்கொள்ள அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் ஒன்றிணைகின்றனர். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ள சூழலில், இந்த சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடத்தப்போகும் பிரம்மாண்டப் போர் ரசிகர்கள் இதுவரை திரையில் பார்த்திராத அனுபவமாக இருக்கும்.
மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த பிரபல சூப்பர் ஹீரோக்கள் எதிர்பாராத வகையில் ஒன்றிணைந்து, தங்களது இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் ஒரு பேராபத்தை எதிர்கொள்வதே மார்வெல் ஸ்டுடியோஸ், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் கதை.
ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் மெக்ஃபீலி மற்றும் மைக்கேல் வால்ட்ரான் திரைக்கதை எழுதியுள்ளனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிட்டோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பாக்ராக், வியாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான் கமென், ரெபேக்கா ரோமிஜின், டெனோச் ஹுர்டா மெஜியா, மாபெல் கடேனா, அலெக்ஸ் லிவினல்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயன் மெக்கெல்லன் மற்றும் பேட்ரிக் ஸ்டீவர்ட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மார்வெல் ஸ்டுடியோஸின், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதாவது, டிசம்பர் 17 அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் இன்பினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்பங்களிலும் ரசிகர்களைக் கவரத் தயாராக உள்ளது.