தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் லைட்மேன் பிரிவை சேர்ந்த சங்கத்தினர் தங்களது வெளியூர் பயணப்படியை குறைத்துக்கொள்ள மாட்டோம் என சமீபத்தில் ’பில்லா பாண்டி’, படத்தின் படப்பிடிப்பை தேவையில்லாமல் நிறுத்தினார்கள்.. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.
இருந்தாலும் இனிமேல் பெப்சி தொழிலாளர்களுடன் தான் படப்பிடிப்பிடிப்பு நடத்த வேண்டும் என நிர்ப்பந்தம் இல்லை.. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வசதியான தொழிலாளர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது..
இதைக்கண்டு பெப்சி தரப்பில் கலக்கமடைந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், அல்லது இறங்கிவர விரும்பாமல், கடந்த ஆகஸ்ட் மாதம் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி, பின்னர் இரண்டு நாட்களில் முடித்துக்கொண்டார்கள்.
ஆனாலும் பெப்சி அமைப்பினர் அல்லாமல் புதிய ஆட்களை கொண்டு படப்பிடிப்பை நடத்தும் சூழலே நிலவியதால் செப்-1ஆம் தேதி முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தை துவக்கியது பெப்சி.. இந்தநிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் நேற்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் பேசி சுமூக முடிவு எட்டப்பதால், பெப்சி அறிவித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெற்று, இன்று முதல் படப்பிடிப்பு நடைபெறும் என இரு தரப்பினராலும் முடிவு செய்யப்பட்டுள்ளது.