இது நடிகர்களின் படம், இது இயக்குனர்களின் படம் என அறியப்படும் காலம் மாறி, இது இந்த தயாரிப்பாளரின் படம், இந்த நிறுவனம் தயாரித்த படம் என்று சொல்லும் அளவுக்கு இன்று தமிழ்சினிமாவில் சில நிறுவனங்கள் மட்டுமே கவனம் பெற்றுள்ளன..
அந்தவகையில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் அவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அதற்கு கடந்த 2016ல் வெளியான ‘ஜோக்கர்’ ஒரு உதாரணம் என்றால், 2017ல் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் ‘அருவி’ ஆகிய இரண்டு படங்களும் இரண்டு விதமான உதாரணங்கள்.
அருவி போன்ற சமூக நோக்கிலான கதை, அதிகரிப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையுடன் இன்று 25 நாட்களை தாண்டி, ஓடிக்கொண்டு இருக்கிறது. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பிரமாண்டமான படமும் இன்று 50வது நாளை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக அறிந்து, கதையை தேர்வு செய்வதில் மிகுந்த அக்கறை காட்டி, கதையிலும், செலவிலும் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் நல்ல படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்கள் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர்.பிரபுவும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும்.
தற்போது சினிமா இருக்கும் சூழலில் ஆரோக்கியமான படங்களை மட்டுமே தயாரிப்பது என்கிற தீர்க்கமான முடிவெடுத்துள்ள ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சினிமா கலைஞர்களுக்கு மட்டுமல்ல சினிமா ஆர்வலர்களுக்கும் நம்பிக்கை வெளிச்சம் தருகிறது என்றால் அது மிகையில்லை.