மோகன்லாலை தற்காப்பு கேடயமாக பயன்படுத்தும் இயக்குனர்..!

தன்மீது தொடுக்கப்படும் தாக்குதலில் இருந்து தப்பிக்க மோகன்லாலை தனக்கு தற்காப்பு கேடயமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன். அதற்குமுன் ஒரு சிறிய ஃப்ளாஷ்பேக்கை பார்த்து விடுவோம்.

சமீபத்தில் நடைபெற்ற கேரள திரைப்பட கண்காட்சியாளர்கள் கூட்டமைப்பின் புதிய அலுவலக கட்டட திறப்புவிழாவை AMMA என்று சொல்லப்படுகின்ற நடிகர்சங்கத்தை சேர்ந்தவர்களும் FEFKA என்று அழைக்கப்படும் கேரள திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்களும் திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.

இதனை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதிய அந்த கூட்டமைப்பின் தலைவரும் பிரபல தயாரிப்பாளருமான லிபர்ட்டி பஷீர், இவர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகர்சங்க உறுப்பினரான மோகன்லால் நடித்து மே-8ஆம் தேதி வெளியாக இருந்த ‘மிஸ்டர் ஃப்ராடு’ படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கு தடைவிதித்தார்.

ஆனால் இந்த தடை அறிவிப்பை கேட்டு கொதித்துப்போன படத்தின் இயக்குனர் உன்னிகிருஷ்ணன், “மோகன்லால் படம் சொன்ன தேதியில் ரிலீஸாகும். அப்படி அவர் படம் ரிலீஸாகவிட்டால் வேறு எந்தப்படமும் ரிலீஸாக முடியாது.. ரிலீஸாக விடமாட்டோம் என்று சவால் விட்டதோடு ஒருவழியாக கடந்தவாரம் 17ஆம் தேதி படத்தையும் ரிலீஸ் பண்ணி காட்டினார்.

இதனால் இப்போது லிபர்ட்டி பஷீரின் கோபம் உன்னிகிருஷ்ணன் பக்கம் திரும்பியுள்ளது. “’மிஸ்டர் ஃப்ராடு’ படத்தின் தயாரிப்பாளரும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் தான் போனால் போகிறதென்று அந்தப்படத்தை விட்டுவிட்டோம். இனி உன்னிகிருஷ்ணன் படங்களுக்கு தடையை நிரந்தரமாக்குவோம்” என சிவப்புக்கொடி பிடித்துள்ளார்.

உன்னிகிருஷ்ணன் மட்டும் சளைத்தவரா என்ன? பார்த்தார்.. நேற்று மோகன்லாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு தனது அடுத்த படத்திலும் மோகன்லால் தான் ஹீரோ என தனது இணையதள பக்கத்தில் அறிவித்துவிட்டார். இனிமேல்தான் அது மோகன்லாலின் படம் ஆகிவிடுமே.. அதை எப்படி தடுக்கமுடியும்..? அந்தவகையில் மோகன்லாலை தனது தற்காப்பு கேடயமாக பயன்படுத்தி லிபர்ட்டி பஷீருக்கு மீண்டும் சவால் விட்டுள்ளார் உன்னிகிருஷ்ணன்.

MohanlalUnni Krishnanஉன்னிகிருஷ்ணன்மோகன்லால்