இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் நவ-10ஆம் தேதி ரிலீஸாக இருப்பதையொட்டி அந்தப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஷால் கலந்துகொண்டு பேசிய விஷால், “தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போல இருக்கிறது” என்றார்.
படத்தின் நாயகர்கள் குறித்து விஷால் பேசும்போது, “விக்ராந்த் என்னுடைய தம்பி, சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும். மெஹ்ரீனுடன் நான் “தம்ப்ஸ் அப்“ விளம்பரத்தில் நடித்துள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார். அவரும் வெற்றி பெற வேண்டும்” என வாழ்த்தினார் விஷால்.
விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியபோது, “நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. நாயகன் சந்தீப்புடன் நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது சிலகாலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய்சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும்” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.