‘X வீடியோஸ் படத்தின் இயக்குனர் சஜோ சுந்தர். இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்..
“என்னுடைய முதல் படத்தை ஒரு கமர்ஷியல் படமாகத்தான் இயக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது X வீடியோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளேன்.. இதை கிளுகிளுப்பான படம் என்று நினைத்துவிடவேண்டாம். இது விறுவிறுப்பான த்ரில்லர் படம். அதை சமூக விழிப்புணர்வுடன் கொஞ்சம் நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறேன்.
இது இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் விதமாக எடுக்கப்பட்ட படம்.. குறிப்பாக கல்லூரி பெண்களை, குடும்ப பெண்களை இணையதள ஆபத்தில் இருந்து அவர்களை பாதுகாக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள படம் இது.. விரைவில் இந்த ஆபாச இணையதளங்களை தடை செய்யச்சொல்லி வழக்கு தொடுக்கவும் இருக்கிறேன்.. இந்த ஆபாச இணையதளங்கள் பற்றிய உண்மையை தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே.. தெரியாத அப்பாவி ஜனங்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களது கவனத்திற்கு இந்த ஆபத்தை பற்றி கொண்டுசெல்வதற்காகவே இந்தப்படத்தை எடுத்துள்ளேன்.
சமீபத்தில் அரசு பள்ளிகளில் சரியான கழிப்பறை வசதியின்றி மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை அடக்கிக்கொண்டு, அதனால் பல இன்னல்களுக்கும் உடல்நல குறைவுக்கும் ஆளாவதை பத்திரிக்கை ஒன்றில் படிக்க நேர்ந்தபோது, மிகவும் வேதனைப்பட்டேன்.. இந்தப்படத்தில் கிடைக்கும் லாபத்தைக்கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் என்னால் இயன்ற அளவு அரசுபள்ளிகளில் கழிப்பறை கட்டிக்கொடுக்க தீர்மானித்துள்ளேன்”. இவ்வாறு கூறியுள்ளார் சஜோ சுந்தர்.