ராஜா மந்திரி இயக்குனரை ஊக்கப்படுத்திய சமுத்திரக்கனி-பா.ரஞ்சித்..!

‘இறுதிச்சுற்று’ என்கிற கமர்ஷியல் வெற்றிப்படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பெண்களாலும் இயக்குனராக சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்தவர் சுதா கொங்கரா. அவரை தொடர்ந்து ‘ராஜா மந்திரி’ படத்தின் மூலம் உஷா கிருஷ்ணன் என்கிற பெண் இயக்குனர் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார்.

‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் ஹீரோவாக நடிக்க, கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார் காளி வெங்கட். படம் முழுதும் வரும் முக்கிய வேடத்தில் பாலசரவணன் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஷாலின் என்கிற ஹீரோயின் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமல்ல சின்னத்திரையில் நடித்துக்கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிவரும் வைஷாலி இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக காளிவெங்கட்டுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் உஷா கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினரை வாழ்த்திப்பேச இயக்குனர்கள் சமுத்திரக்கனி, பா.ரஞ்சித், ஆர்.கண்ணன், சசி ஆகியோர் வந்திருந்தனர்.. இந்த நிகழ்வில் பேசிய சமுத்திரக்கனி “இயக்குனர்களில் ஆண், பெண் என்கிற பேதம் தேவையில்லை.. மக்கள் ரசிக்கும்படி படத்தை கொடுத்தாலே போதும்.. அந்தவகையில் இந்த படத்தின் இயக்குனர் உஷா கிருஷ்ணன் இந்தப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய ரஞ்சித்தும் இதே கருத்தை வலியுறுத்தி பேசியதுடன், தான் எப்படி தனது வாழ்க்கையில் கடந்துவந்த நிகழ்வுகளை வைத்து ‘அட்டகத்தி’ படத்தை உருவாக்கினாரோ, அதேபோல இயக்குனர் உஷா கிருஷ்ணனும் அவரது வாழ்வியல் நிகழ்வுகளை வைத்தே இந்தப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படம் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கூறி பாராட்டுக்களை தெரிவித்தார்.

Kaali VengatKALAIYARASANRaja ManthiriRanjithUma