இயக்குனர் தங்கர் பச்சானை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.. சமூக நோக்கிலான, உணர்வுப்பூர்வமான படங்களை மட்டும் தான் எடுப்பார்.. அதேசமயம் வராது வாயிலிருந்து இந்தப்படம் நல்லா இருக்கு என ஒரு பாராட்டு கிடைப்பது என்பது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற மாதிரி என்றே சொல்லலாம்.
அப்படி தங்கர் பச்சான் என்கிற வசிஷ்டர் வாயிலிருந்து ‘பிரம்மரிஷி’ பட்டம் பெற்றிருக்கிறார் தனுஷ்.. சமீபத்தில் அவர் இயக்கத்தில் முதல் படமாக வெளியான ‘ப.பாண்டி’ படத்துக்காகத்தான் தனுஷை பாராட்டியுள்ளார் தங்கர் பச்சான்..
இந்தப்படம் பற்றி அவர் கூறும்போது, “நெடுநாளைக்குப்பின் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் படம் பார்ப்பவர்கள் அனைவரின் உணர்வையும் தொட்டுப்பார்த்து விட்டு சென்றிருக்கிறது. ஒரு தகப்பனின் உணர்வையும், அவர் மூலம் படம் பார்ப்பவர்களின் குற்றவுணர்வையும் வெளிக்கொண்டு வந்திருக்கும் இந்தப்படம் தமிழ் சினிமா இதுவரைப்பேசாத சில பகுதிகளை பேசியிருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திரையரங்கு சென்று பார்க்க ஒரு திரைப்படம் ப.பாண்டி. படம் பார்த்த ஒவ்வொருவரும் அதன்பின் தங்களுக்குள் ஏற்பட்ட மாற்றத்தை உணர்வார்கள். ஒவ்வொருவரும் தவறாமல் அவரவர் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் தவறாமல் காண்பியுங்கள். எப்பொழுதுமே உணர்வுகளுக்குப்பின்தான் தொழில்நுட்பம் என்பதை இந்தப்படமும் உணர்த்துகிறது. தனுஷின் இந்த முயற்சியை படம் பார்த்த அனைவரையும் போல் நானும் பாராட்டி மகிழ்கிறேன்” என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் தங்கர் பச்சான்..